உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டம் பிசவ்லியை சேர்ந்த இர்பான் தனது கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான மசூதியில் பிரார்த்தனை அழைப்பு விடுப்பதற்கான அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கியை அமைப்பதற்கு அனுமதி தரும்படி கடந்த ஆண்டு விண்ணப்பித்தார். ஒலிப்பெருக்கி அமைப்பதற்கு அனுமதியளிக்க முடியாது என அப்பகுதி ’சப்-டிவிஷ்னல் மாஜிஸ்திரேட்’ உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இர்பான் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மசூதியில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கியை பயன்படுத்த தடை விதித்துள்ள மாஜிஸ்திரேட்டின் உத்தரவு அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மசூதிகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது அடிப்படை உரிமையில்லை. மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யமுடியாது’ என கூறி இர்பான் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.உத்தரபிரதேசத்தில் மதவழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை அகற்றி மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.