விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இதற்கு பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் பூஸ்டர் நேற்று பரிசோதிக்கப்பட்டது.ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் ஏவு தளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படும் பூஸ்டர் சோதிக்கப்பட்டது.இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலருமான சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.