அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு அமைப்பு (இப்கோ) சார்பில் ‘விவசாய ட்ரோன்களின் பயன்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்’ தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கம் குரோம்பேட்டையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், ‘உலகின் முதல் விஞ்ஞானி விவசாயிதான். விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே வேளாண் தொழிலை செய்து வருகின்றனர். எந்தவொரு விவசாயியும் தனது குழந்தைகள் வேளாண் தொழிலுக்கு வருவதை விரும்புவதில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டும். நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு திரும்பச் சேவையாற்றுவதற்கான காலம் கைகூடியுள்ளது. எனவே, டுரோன் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் தொழிலை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து வெளியேறுபவர்களுக்கு அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கான வழிகாட்டுதல்கள் சரியாக கிடைப்பதில்லை. பட்டதாரிகளை நெறிப்படுத்தி வழிகாட்டினால் ஏராளமான தொழில் முனைவோர்களை உருவாக்க முடியும். விவசாயம் முதல் ராணுவம் வரை டுரோன்கள் தேவைப்படுகின்றன. இளைஞர்கள் நமது மண் வளத்தை மீட்டெடுக்க ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். மனிதர்கள், விலங்குகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு மருத்துவமனைகள் இருப்பதுபோல், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கவும் பிரத்யேக விவசாய மையங்கள் அமைக்கப்பட வேண்டும். பயிர் சாகுபடியில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்’ என கூறினார்.