துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பூல் பாண்டியன் திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் வேலை தேடி மும்பை சென்றுள்ளார். அங்கு வேலை கிடைக்காததால், வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்க தொடங்கினார். ஊர் திரும்பிய அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தனர். இதனால் தனது யாசகத்தைத் தொடர்ந்த பூல் பாண்டியன் கடந்த நாற்பதாண்டுகளாக பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும்பகுதியை தொண்டு காரியங்களுக்கு செலவிட்டு வருகிறார். சுமார் 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலி, மேசைகள், குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி தந்துள்ளார். கொரோனா பரவல் தொடங்கிய போது மதுரை வந்த பூல் பாண்டியன் ஏற்கெனவே 12 முறை மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தலா பத்தாயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் திண்டுக்கல் வந்த பூல் பாண்டியன் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களில் யாசகம் எடுத்ததில் கிடைத்த ரூ. 10 ஆயிரத்தை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் வழங்கினார். அவரது நல்ல உள்ளம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதுடன் தாங்களும் சமுதாயத்திற்காக எதாவது செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை அளித்து வருகிறது.