ஹிந்துத்துவா உலகளாவிய ஒருங்கிணைப்புக்கான தத்துவம்

0
275

நாக்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மகாராஷ்டிர அரசின் முன்னாள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், ஹிந்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகளில் மூத்த கல்வியாளரும், இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் எழுத்தாளருமான டாக்டர். எஸ்.என். பதான் எழுதிய ‘ஹிந்துத்வா என்பது பாரதிய ஏகாத்மதாவைப் பற்றியதேயன்றி முஸ்லீம் வெறுப்பு குறித்து அல்ல’ என்ற புத்தகம் இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் துணைத் தலைவர் டாக்டர் கிருஷ்ண கோபால் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்) அமைப்பின் புரவலர் டாக்டர் இந்திரேஷ் குமார், புனே எம்.ஐ.டியின் நிர்வாக அறங்காவலர் ராகுல் காரத் ஆகியோர் ஹிந்து மற்றும் முஸ்லீம் அறிஞர்கள் முன்னிலையில் இந்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், ஜாமியா ஹம்தார்ட் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தலைவர், லக்னோ மொழிப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், காஷ்மீர் பல்கலைக் கழகப் பதிவாளர், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயல் தலைவர், ஹஜ் கமிட்டியின் முன்னாள் தலைவர், எம்.ஆர்.எம் தேசிய அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய டாக்டர் கிருஷ்ண கோபால், ‘ஹிந்துத்துவா என்பது உலகளாவிய ஒருங்கிணைப்புக்கான ஒரு தத்துவம். இதுவே பாரதத்தின் அடிப்படைத் தத்துவமும் ஆன்மாவுமாகும். உலகனைத்தும் ஒரே குடும்பம் என்ற ‘வசுதைவ குடும்பகம்’ என்பது ஹிந்துத்வாவின் அடிப்படைக் கோட்பாடு. அது ஒருமை உணர்வை எங்கும் பரப்புகிறது. இது உலகமயமாக்கல் அல்ல, உலகமயமாக்கல் என்பது லாபம் என்ற கொள்கையால் வழிநடத்தப்படுகிறது. ஆனால், ஹிந்துத்துவா ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ளார்ந்த ஒற்றுமையை உணர்தல் கொள்கையால் வழிநடத்தப்படுகிறது. பாரதத்தின் எந்த ஒரு துறவியும் அல்லது ஒரு பாரம்பரியமும் தன்னைப் பின்பற்றுபவர்களின் நலனுக்காக மட்டுமே விருப்பம் தெரிவித்ததில்லை. அவர்களும் அனைத்து மரபுகளும் உலக நலனைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. ஏனெனில் அவர்கள் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கொள்கையை நம்பினார்கள். இந்த சிந்தனையுடன் மட்டுமே நாம் முழு உலகையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைக்க முடியும்’ என்று பேசினார்.

டாக்டர் இந்திரேஷ் குமார், “உண்மை மற்றும் உரிமைக்காக நாம் தைரியத்தை காட்ட வேண்டும். ராவணன் தனது காலத்தின் சிறந்த அறிஞராக இருந்தலும் தனது மோசமான குணம் மற்றும் தவறான செயல்கள் காரணமாக ராட்சசனாகவே கருதப்பட்டான். கம்சன் மதுராவின் அரசன் ஆனால் மதுரா மக்கள் அவனை வணங்கியதில்லை. இன்று நாம் அத்தகைய தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். மேலும், முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், யாராவது உங்கள் வீட்டைக் கைப்பற்றி அழித்துவிட்டால், இதை எப்படி ஜனநாயகம் என்று சொல்ல முடியும்? அவர் நமது சொந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நமது வீட்டை அவரிடம் இருந்து மீட்க போராடுவோம். வெற்றி பெறும் வரை தலைமுறை தலைமுறையாக இணைந்து போராடுவோம். இந்த உண்மை நமக்கு எப்போது புரியும்? எவ்வளவு காலம் மக்களை இருளில் வைத்து உண்மையிலிருந்து வெகு தொலைவில் வைத்திருப்போம்? நாம் உண்மையை ஜெயிக்க அனுமதிப்போம். நம் அனைவருக்கும் பொதுவான டி.என்.ஏ உள்ளது. அது கடந்த காலத்தில் இருந்தது, எதிர்காலத்திலும் அப்படியேத்தான் இருக்கும். ஏனென்றால் நம் முன்னோர்கள் அனைவரும் ஹிந்துஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த யதார்த்தத்தை நாம் விரைவில் புரிந்துகொள்வது நல்லது. எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண ஆரோக்கியமான விவாதம் அவசியம். அப்போதுதான் அமைதியையும் வளர்ச்சியையும் பெற முடியும்” என தெரிவித்தார்.

எழுத்தாளர் டாக்டர் எஸ்.என்.பதான், ‘ஹிந்துத்துவா முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ அல்லது வேறு எந்த சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல. சமூக மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை அடைவதற்கு அதுவே முன்னோக்கி செல்லும் வழி. ஹிந்து என்ற சொல் இல்லாத பழங்காலத்திலிருந்தே, நம் ஒவ்வொருவரிடமும் வாழும் தெய்வீகக் கொள்கையின் இருப்பை பாரதம் கண்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் பாரதத்தால் தொடங்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கான நலன் என்பதை உலகம் அனுபவித்துள்ளது. ஏழைகளுக்கு உணவு வழங்குவது மட்டுமின்றி, பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் அந்தக் காலத்தில் இருந்தே நாம் பராமரித்து வருகிறோம். இங்கு அடைக்கலம் தேடி வந்த அனைவருக்கும் இந்த நாடு பரந்த மனதுடன் அடைக்கலம் அளித்தது. அவர்கள் தங்கள் மத மரபுகளையும் வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடிக்க அனைத்து வசதிகளையும் வழங்கியதற்கு உலகம் சாட்சியாக உள்ளது. அவர்கள் வெவ்வேறு மத மற்றும் அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த படைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை நாங்கள் எங்கள் சொந்தமாகக் கருதுகிறோம். இந்த கண்ணோட்டத்தில் ஹிந்துத்துவாவைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் குறுகிய கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால், பன்முகத் தன்மைகள் இருப்பதை மறுத்தால், முரண்பாடுகள்தான் ஏற்படும்’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here