உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் மதகுரு ஒருவரின் முன்னிலையில் ஒரு சிறுவன் சில மத நூல்களைப் படிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதுகுறித்த விசாரணையில், திடுக்கிடும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஹிந்து மதத்தை சேர்ந்த அந்த சிறுவன் நிகில் குமார் சிங். அவர், 2005ல் பிறந்தார், 8ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் பகுதி நேரமாக வேலை செய்யும் ஒரு கடைக்கு அருகில் வசிக்கும் விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணான சிம்ரன் அவன் மீது காதல் வயப்பட்டார். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு ஆசைகாட்டி, முளைசலவை செய்து, கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றி அவனை திருமணம் செய்து கொண்டார். சிம்ரனுக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இது குறித்து சிறுவனின் தாய், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் கூறுகையில், “எனது மகனை கட்டாய மதமாற்றம் செய்து ஒரு பெண் திருமணம் செய்து கொண்டார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். காவல்துறையினர் என் புகாரை ஏற்கவில்லை. பஜ்ரங் தள் அமைப்பிடம் முறையிட்டேன். அவர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். அதன் பிறகே சிம்ரன், அவரது பெற்றோர் ஜமீலா பானோ, முகமது ஹனிப் மற்றும் மதகுரு தௌஹீத் ஹுசைன் மீது வழக்கு பதிவு செய்தனர்” என தெரிவித்தார். சேவா நியாய உதான் அறக்கட்டளை இந்த விஷயத்தை குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசியக் குழுவின் (என்.சி.பி.சி.ஆர்) கவனத்திற்குக் கொண்டு சென்றது. அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்குமாறு கான்பூர் காவல் ஆணையருக்கு என்.சி.பி.சி.ஆர் கடிதம் எழுதியுள்ளது. மேலும், சிறுவனை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் ஆஜர்படுத்தி 7 நாட்களுக்குள் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.