தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெத்தம்மாதல்லி கோயிலில் உள்ள பிரசாதக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஹலால் பொருட்களையும் ஹலால் விளம்பரப் பலகைகளையும் அகற்ற பக்தர்களும் ஹிந்து அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், கோயில் நிர்வாகம் இதற்கு செவிசாய்க்க மறுத்தது. இதனையடுத்து, அதிரடியாக அங்கு சென்ற ஹிந்து ஐக்கிய முன்னணி கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் அந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஹலால் விளம்பரப் பலகைகளை அகற்றினர். மேலும், எந்த ஒரு ஹிந்து கோவில் வளாகத்திலும் ஹலால் போன்ற ஹிந்து அல்லாத செயல்களை ஊக்குவிப்பது அனுமதிக்கப்படாது என்றும், ஆந்திரா, தெலுங்கானா என்ற இரு தெலுங்கு மாநிலங்களில் உள்ள எந்த கோயில்களிலும் இனி ஹலால் போர்டு வைக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். விலங்குகளை அறுக்கும் ஹலால் நடைமுறையை சில அமைப்புகள் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே கோயில்களில் வைக்க ஊக்குவிக்கின்றன என அவர்கள் தெரிவித்தனர். ஹிந்துத்துவா அமைப்புகளின் தலையீட்டையடுத்து, பெத்மம்மா தல்லி கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஹலால் முறையைத் தடைசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.