ஹரியாணாவில் ரூ.6000 கோடியில் கட்டப்பட்ட அம்ருதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.
ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் மாதா அம்ருதானந்தமயி மடத்தின் சார்பில் சட்டப்பட்டிருக்கும் பல்நோக்கு மருத்துவமனையில் சுமார் 2,600 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹரியாணா மக்களுக்கு மிகப்பெரிய அளவில் மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த மருத்துவமனை ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரிய தனியார் மருத்துவமனை என்ற பெருமையைப் பெறுகிறது.
மருத்துவமனையில், 81 சிறப்புப் பெற்ற மருத்துவ சிகிச்சை அளிக்கவும், முழுவதும் தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட 64 அறுவைசிகிச்சைக் கூடங்களும், பல முன்னேறிய வசதிகளுடன் கூடிய ஐசியு மற்றும் 534 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளது.
மருத்துவமனையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிருதா மருத்துவமனை கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வருகிறது. 125 படுக்கை வசதிகளுடன் 1998ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மருத்துவமனை தற்போது 1350 படுக்கை வசதிகளுடன் ஆண்டுதோறும் 8 லட்சம் வெளிப்புற நோயாளிகளுக்கும், 50 ஆயிரம் உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.