இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஆராய்ச்சி மற்றும் முதுகலை கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், ‘கிளஸ்டர்ஸ் 2022’ எனும் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு, நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் சிவன் பேசியது :நாட்டின், 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒரே ராக்கெட்டில், மாணவர்களால் உருவாக்கப்பட்ட, 75 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.செயற்கைக்கோள்களின் உதவியால்தான், குக்கிராமங்கள் வரை தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு சேர்க்க முடிந்தது. புயல் எச்சரிக்கை, கடலில் எல்லை அறிதல், மீன்கள் அதிகமிருக்கும் இடங்கள் கண்டறிதல் என, பல விஷயங்களுக்கு செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
செயற்கைக்கோள்கள் தயாரித்தல், விண்ணில் ஏவுதல், மென்பொருள் தயாரித்தல் என அனைத்தும், நம் நாட்டிலே உற்பத்தி செய்வதால், பெரும் பொருட்செலவு மிச்சமாகிறது.இஸ்ரோ மட்டுமே, நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறது.புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு அரசு வாய்ப்பு தருகிறது. எனவே, மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதால், புதிய தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட முடியும். என பேசினார்.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர், செயலாளர், தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.