இந்த பூமியில் நல்லதை படைத்த ஆண்டவன் தான், கெட்டதையும் படைத்திருக்கின்றான்!

0
233

இந்த பூமியில் நல்லதை படைத்த ஆண்டவன் தான், கெட்டதையும் படைத்திருக்கின்றான்!நல்லதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது, எதற்காக கெட்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’? என்றாவது இந்த கேள்வியை நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா? இன்றைக்கு கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமா? ஒரு சிறிய கதையோடு!

குருவிடம் ஒரு மாணவன், இதே கேள்வியை கேட்டான்! அதற்கு, அந்த குரு என்ன விளக்கம் அளித்தார்? என்பதை நாம் தெரிந்து கொண்டால், தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது’? அந்த குரு, சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார்.

சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு, பின்வருமாறு விளக்கம் அளித்தார்.

‘பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?’ பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கின்றோம்.

சாணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம். இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றவாறு பதிலைக் கூறினார்.

இறைவன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது. புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றோம். இதுதானே வாழ்க்கை! ஒரு மனிதன் மகானாக மாறுவதற்கும், மீண்டும் மறுபிறவி எடுப்பதற்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வாழ்கின்றார்கள், என்பதை பொறுத்தே அமைகின்றது. அனைவரும் சிந்தித்து செயல்பட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஸர்வம் ஸ்ரீ விஷ்ணு மயம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here