ஏற்காடு : ”பிரதமரின் நலத்திட்டங்களை மக்களிடம் சேர்க்காமல், மாநில அரசுகள் மறைக்கின்றன,” என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பிஷ்வேஷ்வர் டிடு குற்றஞ்சாட்டினார்.
சேலம் மாவட்டம், ஏற்காடில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் குறை கேட்பு முகாமுக்கு, பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மத்திய பழங்குடியினர் விவகாரம் மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பிஷ்வேஷ்வர் டிடு, நேற்று பங்கேற்றார். துாய்மை பணியாளர்களை சந்தித்தார். அப்போது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, விடுமுறை போன்ற சலுகைகள் கேட்டு, அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பெரியகாடு கிராமத்துக்கு சென்றார். தங்கள் வழக்கப்படி அமைச்சருக்கு, மலை கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் குறை கேட்டறிந்த அமைச்சர், மனுவாக எழுதி கொடுக்கும் படியும், கலெக்டரிடம் கொடுத்து, நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார். நலத்திட்டங்களை கொண்டு வரும் பிரதமர் மோடியின் பெயர் வெளியில் தெரியாமல் இருக்க, மாநில அரசுகள் மக்களை திசை திருப்பி வருகின்றன. தரமான கல்வி கிடைக்க நாடு முழுதும், 700 பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில், தமிழகத்தில் எட்டு இடங்களில் அதற்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.