“நாட்டின் ஆன்மீக தலங்களை மீட்டு வருகிறோம்..!” – பிரதமர் மோடி

0
133

மத்தியப் பிரதேசத்தில் ஆன்மீக நகரமாகக் கருதப்படும் உஜ்ஜைனியில் மகாகாலேஷ்வர் கோயில் நடைபாதை திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ரூபாய் 856 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக பிரதமர் மோடி உஜ்ஜைன் மஹாகலேஷ்வர் கோவிலில் சிறப்புப் பூஜை செய்தார். அப்போது அவருடன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் உடன் இருந்தனர்.

பொதுமக்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஹர ஹர மகாதேவ் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “‘மஹாகல் லோக்கின் மகத்துவம் வரும் தலைமுறையினருக்கு கலாசார மற்றும் ஆன்மீக உணர்வைக் கொடுக்கும். உஜ்ஜயினியில் உள்ள அனைத்தும் உன்னதமானது.. நம்பமுடியாதது. இந்த உஜ்ஜைன் நகரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் செழிப்பு, அறிவு, கண்ணியத்தை அளித்து உள்ளது.

தெய்வீக ஆற்றல் கொண்ட உஜ்ஜைனியின் ஒவ்வொரு மூலையிலும் பரவி உள்ளது. நமது நம்பிக்கையும் இந்தியாவின் உணர்வும் இப்போது தான் விழித்து இருக்கிறது. அந்நிய நாட்டு படையெடுப்பாளர்கள் உஜ்ஜைனியின் ஆற்றலை அழிக்க முயன்றனர்.. இறைவன் உருவாக்கிய இந்த நகரத்திற்கு யார் நினைத்தாலும் தீங்கு விளைவிக்க முடியாது. உஜ்ஜைன் போன்ற இடங்கள் வானியல் தொடர்பான ஆராய்ச்சியின் முதன்மை மையங்களாக உள்ளன.

புதிய இந்தியா அதன் பழங்கால விழுமியங்களுடன் முன்னேறும்போது, ​​அது நம்பிக்கையுடன் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் பாரம்பரியத்தையும் புகுத்துகிறது. அடிமை காலத்தில் இழந்ததை இந்தியா புதுப்பித்து, அதன் பெருமையை மீட்டெடுக்கிறது சமீபத்தில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். அதில் காலனி ஆதிக்கத்தின் அடையாளங்களை நீக்க நடவடிக்கை எடுத்தோம்.

இன்று நமது நாட்டில் உள்ள அனைத்து கலாசார இடங்களும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. நாட்டின் ஆன்மீக தலங்களின் பெருமைகளைத் தொடர்ந்து மீட்டெடுத்து வருகிறோம். அயோத்தியில் பிரம்மாண்ட ஸ்ரீராமர் கோவில் கட்டும் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. காசியில் உள்ள விசுவநாதர் ஆலயம் இந்தியாவின் கலாசாரத்தின் பெருமிதமாகத் திகழ்கிறது. வளர்ச்சிப் பணிகள் சோம்நாத்தில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. இறைவன் ஆசியுடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ‘ஜெய் மஹாகல்” என்று முழக்கமிட்டு தனது உரையை முடித்தார். மஹாகாலேஷ்வர் கோவிலில் கட்டப்பட்ட 900 மீட்டர் நீளமுள்ள ‘மஹாகல் லோக்’ வழித்தடத்தைத் திறந்து வைக்கும் முன்பு, மோடி அங்குக் கோயிலில் பூஜை செய்தார். சுமார் 900 மீட்டர் நீளமான இந்த நடைபாதையில், சிவன் மற்றும் சக்தி தேவியின் உருவம் உள்ளிட்ட சிற்பங்களைக் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தூண்கள் இடம் பெற்று உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here