பொள்ளாச்சி: ”மத்திய அரசின் திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி, மாநில திட்டம் என திருடினாலும், மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள மோடி என்ற மாபெரும் சக்தியை அழிக்க முடியாது,” என, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.
கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி, பொள்ளாச்சியில் நடந்தது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பேசியதாவது: நாடு முன்னேற வேண்டுமென்றால், விவசாயமும், விவசாயிகளும் முன்னேற வேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் விருப்பம்.
விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு, மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, அவர்களது வங்கி கணக்கில், ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தில், 11 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக, தென்னை விவசாயத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது. தென்னை விவசாயம் முன்னேற்றம், தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்போம். குழுக்கள் அமைப்பது, ஏற்றுமதி பிரச்னைகள், நிதி அளிப்பது உட்பட விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு, தமிழகத்தில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி அவர்களது திட்டங்களாக திருட முற்படுகின்றனர். என்னதான், ‘ஸ்டிக்கர்’ ஒட்டினாலும், மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள மோடி என்ற மாபெரும் சக்தியை அழிக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.