இன்று இன்டர்போல் பொதுச்சபை கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

0
169

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் பொது சபை கூட்டம் புதுடில்லியில் இன்று அக்., 18ல் துவங்குகிறது. பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

சர்வதேச அளவில் போலீஸ் துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது இன்டர்போல் அமைப்பு. ஐரோப்பிய நாடான பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் பொது சபை கூட்டம், புதுடில்லியில் இன்று, (அக்., 18ல்) துவங்கி 21ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியாவில் 25 ஆண்டுக்குப் பின் இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.கடைசியாக, 1997ல் நடந்தது. நாட்டின், 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இந்தக் கூட்டம் இங்கு நடத்தப்பட உள்ளது.

புதுடில்லியின் பிரகதி மைதான், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.இந்தக் கூட்டத்தில், 195 நாடுகளின் மத்திய போலீஸ் அமைப்பின் தலைவர்கள், அமைச்சர்கள் என, 2,000 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டின் சார்பில் இந்த அமைப்பில், சி.பி.ஐ., இடம்பெற்று உள்ளது. இன்டர்போல் பொது சபை கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.பி.ஐ., கவனித்து கொள்கிறது.

இதற்கிடையே இன்டர் போல் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மத்திய போலீஸ் அமைப்பைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்க வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here