பாண்டிய மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற பகுதிகளில் முற்கால பாண்டியர்களின் தடயங்கள் பெருமளவு கிடைத்து வருகின்றன.அவற்றின் தொடர்ச்சியாக, பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பொருசுபட்டியில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ஒரு பழமையான பெருமாள் சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிற்பம் 3 துண்டுகளாக உடைந்து காணப்படுகிறது. மூன்றடி உயரம் கொண்ட இந்த சிற்பம் முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலைநயத்துடன், தலையில் மகுடம், மார்பில் ஆபரணங்கள், முப்புரி நூல், இடையில் இடைக்கச்சை, 2 கால்களிலும் வீரக்கழலைகள், சங்கு சக்கரம் ஆகியவற்றுடன் நின்ற கோலத்தில் உள்ளது. இந்த சிலை கிடைத்துள்ள இந்த பகுதியில் ஒரு காலத்தில் பெருமாள் கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னாளில் அந்நிய படையெடுப்பினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சிதைந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது.