குஜராத் மாநிலம் ஏக்தா நகரில், ஒற்றுமை சிலை பகுதியில் ‘மிஷன் லைப்’ இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஐக்கிய நாடுகள் பொது சபையின் பொது செயலாளர் ஆன்டோனியோ குட்டெரஸ்சும் துவக்கி வைத்தனர்.
இந்த விழாவில் ஆன்டோனியோ குட்டெரஸ் பேசுகையில், நமது கிரகத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக தீர்வு காண தனிநபர்களும், சமுதாயமும் அங்கம் வகிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு தாங்கள் அளித்த உறுதிமொழிகளை வளர்ந்த நாடுகள் பின்பற்ற வேண்டும். நாம் புதுப்பிக்கத்தக்க புரட்சியை கட்டவிழ்த்து விட வேண்டும் மற்றும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: காலநிலை மாற்றம் என்பது வெறும் கொள்கை தொடர்பான பிரச்னை என்றும், அரசு அல்லது அரசு சர்வதேச நிறுவனங்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்ற கருத்து உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது, பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை மக்கள் அனுபவித்து வருகின்றனர். பனிக்கட்டிகள் உருகும் போது, ஆறுகள் வற்றும் போது என அனைத்து இடங்களிலும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை பார்க்கிறோம்.
இந்த பருவநிலை பிரச்னையை எதிர்த்து போராட ‘மிஷன் லைப்’ உதவும். சிலர் ஏசி வெப்பநிலையை 17 டிகிரி அளவுக்கு குறைப்பார்கள். இது சுற்றுச்சூழலில் எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும் போது சைக்கிளை பயன்படுத்துவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மறுபடி பயன்படுத்துதல், குறைவாக பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி ஆகியவை இந்தியாவின் பாரம்பரியமாகவும், கலாசாரமாகவும் உள்ளது. இந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வருவதுடன், நிலையான தேர்வுகளை மேற்கொள்வதில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.