காந்தி நகர்: வரும் 2025ல், ராணுவ ஏற்றுமதியை 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
குஜராத்தின் காந்தி நகரில் நடந்த 12வது ராணுவ கண்காட்சியில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நம் வர்த்தக மற்றும் ராணுவ உறவை மேம்படுத்தவும், உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய ராணுவ உற்பத்தியை இந்தியாவில் நிறுவ முதலீடுகளை ஈர்ப்பதிலும், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.
அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது வருவாயை பெருக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். நட்பு நாடுகளுடன் இணைந்து, அவர்களின் பங்களிப்புடன் மிக சிறந்த ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்கவே, ‘ஆத்மநிர்பார் பாரத்’ எனப்படும் சுயசார்பு இந்தியா திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக எங்கள் ராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதுடன் பல்வேறு நாடுகளின் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
லாபகரமான முதலீடுகளை செய்வதற்கும், அவற்றை தக்க வைப்பதற்கு தேவையான பொருளாதாரத்தை வகுப்பதற்கும் உள்நாட்டு தேவை மட்டுமே எப்போதும் வழங்காது. எனவே, ராணுவ ஏற்றுமதியை 2025ல் 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.