இந்திய தீபாவளி கொண்டாட்டத்தின் ஒளி வெள்ளம்; இங்கிலாந்து வரை பிரதிபலித்துள்ளது போலும். ஆம். தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் மகிழ்ச்சி சூழ்நிலையில், பிரிட்டனின் பிரதமராகும் வாய்ப்பு இந்தியாவை பூர்வீகமாக உடையவருக்கு கிடைத்துள்ளது. அங்கு வாழும் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடானபிரிட்டனின் முதல் ஹிந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வானார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் பிரதமரானது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். பிரிட்டன் பிரதமர் பதவியை வழங்கியதற்காக பிரிட்டன் மக்களுக்கு நான் நாள் முழுவதும் உழைப்பேன்,நேர்மையுடனும் பணிவுடனும் மக்களுக்கு சேவை செய்வேன். நமக்கு இப்போது ஒற்றுமையும் தேவை, கட்சியையும் நாட்டையும் ஒன்றாகக் கொண்டு வருவதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன், அதுதான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி,” என்றார்
சுனக் முதல் ஹிந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், பிரிட்டனில் வெள்ளையர் அல்லாத ஒருவர் முதல் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெருமையை பெறுகிறார். ஏற்கனவே, சிங்கப்பூர், மொரிஷியஸ், சுரினாம், மலேஷியா, டிரினிடாட்& டொபாகோ, பிஜி, கயானா, போர்சுகல், அயர்லாந்து, சீஷெல்ஸ் போன்ற நாடுகளிலும் இந்திய வம்சாவழியினர் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருந்துள்ளனர், இன்றும் இருக்கின்றனர். ரிஷி சுனக் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் 1980, மே 12ல் பிறந்தார். இவரது தந்தை கென்யாவை சேர்ந்தவர். தாய் தான்சானியாவை சேர்ந்தவர். இவரது தந்தைவழி தாத்தா பாட்டி பஞ்சாபில் பிறந்து கிழக்கு ஆப்ரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின்னர் பிரிட்டன் சென்றனர். ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, பாரதத்தின் மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதித் துறையில் புகழ் பெற்றுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள். பலதரப்பட்ட உயர் பதவிகளை அடைந்த பின்னும், தன்னுடைய ஹிந்து உணர்வைத் தவிர்ப்பதில்லை சுனக். பகவத் கீதை மீது சத்யப்பிரமணம் செய்துதான் தமது பதவியை ஏற்றுள்ளார். பாரத மக்கள் தெய்வமாக வழிபடும், பசு வழிபாடான ‘கோபூஜை’ செய்கிறார். கீதை நாயகனானகிருஷ்ணா பகவான் அருள் உறையும் இஸ்கான் ஆலயத்துக்கும் செல்கிறார்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி