‘வன்முறையாளர்களிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்’- முன்னாள் முதல்வர்

0
103

சென்னை : தமிழகத்தில், வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள, தி.மு.க., அரசுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் அன்றாடம் ஓரிரண்டு கொலைகள் என்ற நிலை மாறி, எட்டு முதல் 10 கொலைகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. சமீப காலமாக, பெட்ரோல் குண்டு கலாசாரம், வன்முறை கலாசாரம் தலை விரித்தாடுகிறது.

கோவை மாவட்டம், கோட்டைமேடில் உள்ள, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, நேற்றுமுன்தினம் கார் ஒன்று வெடித்து சிதறி, ஒருவர் இறந்துள்ளார். இதற்கு காரணம் காஸ் சிலிண்டர் என்று கூறப்பட்டாலும், காருக்குள் இருந்தவர் போலீஸ் கண்காணிப்பில் இருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இறந்த நபர், இதற்கு முன் தேசிய உளவுத்துறை முகமையான என்.ஐ.ஏ.,வால் விசாரிக்கப்பட்டதாகவும், அவரது வீட்டில், வெடிகுண்டுகள், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியத் துகள்கள், மரக்கரி போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

டி.ஜி.பி., நேரில் ஆய்வு செய்கிறார் என்றால், இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது. இது, தி.மு.க., ஆட்சியில், 1998ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டுகிறது.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு, இதை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. சட்டம் – ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், தமிழக காவல் துறைக்கு உள்ளது.

முதல்வர் உடனடியாக, சட்டம் – ஒழுங்கு பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, தமிழக மக்களை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here