ரயில்வேயின் மற்றொரு மைல்கல்

0
159

ரயில்வே துறையில் 100 சதவீத மின்மயமாக்கலை அடைவதற்கான ஒரு பெரிய இலக்கின் ஒருபகுதியாக, வட மத்திய ரயில்வே (என்.சிஆ.ர்) இப்போது 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கோட்டத்தில் மொத்தமுள்ள 3,222 கி.மீ என்ற என்.சி.ஆர் அகலப்பாதை நெட்வொர்க்கில் மின்மயமாக்கப்பட வேண்டிய கடைசிப் பகுதியான ஜான்சி கோட்டத்தின் இஷாநகர் உதைபுரா பிரிவின் 76 பாதை கி.மீ தூரத்தை மின்மயமாக்கி முடித்துள்ளதன் மூலம் வட மத்திய ரயில்வே இந்த சாதனையை அடைந்துள்ளது. முன்னதாக ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இரண்டு பிரிவுகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டிருந்தன, இதன் மூலம் இப்போது என்.சி.ஆரின் முழு அகலப்பாதை நெட்வொர்க்கும் மின்மயமாக்கப்பட்டுள்ளது. ‘மிஷன் 100 சதவீத மின்மயமாக்கல் – நிகர ஜீரோ கார்பன் உமிழ்வை நோக்கி நகரும்’ ரயில்வே துறையின் மாபெரும் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பசுமை மற்றும் தூய்மையான போக்குவரத்து முறையை மக்களுக்கு வழங்குவதற்காக, இந்திய ரயில்வே அதன் முழு அகலப்பாதை நெட்வொர்க்கையும் மின்மயமாக்கி வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை, இந்திய ரயில்வே மொத்தமுள்ள 65,141 கி.மீ தூர ரயில் பாதையில், 53,098 க்.மீ தூரத்தை மின்மயமாக்கியுள்ளது, இது மொத்த அகலப்பாதை நெட்வொர்க்கில் 81.51 சதவீதமாகும். இந்திய ரயில்வே 2024க்குள் அகல ரயில் பாதைகளின் முழு நீளத்தையும் மின்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அவ்வகையில், நடப்பு நிதியாண்டில் மின்மயமாக்கல் இலக்கு 6,500 கி.மீ ஆகும், அதில் 851 கி.மீ தூரம் 2022 செப்டம்பர் 30 வரை மின்மயமாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here