அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பியுள்ள கடிதத்தில், “வரும் 1.1.2023 அன்றைய தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நவம்பர் 9ம் தேதி தொடங்க உள்ளன. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை வாக்காளர் மேற்கொள்ள முடியும். அதற்காக 6, ஏே, 6பி, 7 மற்றும் 8 ஆகிய விண்ணப்பங்களை பெற்று உரிய திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதற்கு வசதியாக நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்ட அளவில் இதுகுறித்து மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். விண்ணப்பங்கள் போதிய அளவில் கையிருப்பு மற்றும் அந்த நாட்களில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் அனைவரும் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.