இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு

0
121

குஜ்ரன்வாலா: பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் நேற்று நடந்த பேரணியில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காலில் குண்டு காயமடைந்த இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான்(70) கடந்த ஏப்ரலில் பதவி விலகினார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து, முக்கியக் கட்சி பிரிந்து, எதிர்கட்சியுடன் இணைந்ததால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. ஊழல்வாதிகளின் கையில் பாகிஸ்தான் மீண்டும் சென்றுவிட்டதாகவும், ராணுவமும், உளவுத்துறையும் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்துவதாக பிடிஐ கட்சி அறிவித்தது. இதில் பங்கேற்பதற்காக இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு நேற்று சென்றார்.

அங்கு அல்லாவாலா சவுக் என்ற இடத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் இம்ரான் கான் உரையாற்ற விரும்பினார். இதையடுத்து, ஒரு கன்டெய்னர் லாரி மீது அவர் ஏறி நின்றார்.

சில நிமிடங்களில் இம்ரான் கான் மீது, தொண்டர்கள் கூட்டத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர், துப்பாக்கியால் சுட்டனர். ஒருவர் கைத்துப்பாக்கியாலும், மற்றொருவர் இயந்திரத் துப்பாக்கியாலும் சுட்டதாகக் கூறப்படுகிறது. லாரிக்கு கீழே நின்று சுட்டதால், துப்பாக்கிக் குண்டு இம்ரான் கானின் வலது காலில் பாய்ந்தது. அவர் கீழே சாய்ந்ததும், அவரை தொண்டர்கள் சுற்றி வளைத்தனர். மர்ம நபர்கள் சுட்ட அடுத்தடுத்த குண்டுகள் தொண்டர்கள் மீதும் பாய்ந்தன. இதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்களில் இம்ரான் கானின் நெருங்கிய நண்பரும், செனட் உறுப்பினருமான பைசல் ஜாவேத்தும் ஒருவர். பிடிஐ கட்சியின் உள்ளூர் தலைவர் அகமது சத்தாவும் காயமடைந்தார்.

இம்ரான் கான் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்டவர் வாக்குமூலம்: மக்களைத் தவறாக வழிநடத்தியதால், பேரணி தொடங்கும் நாளிலேயே இம்ரான் கானை சுட்டுக்கொல்வதற்காக வசீராபாத்துக்கு வந்ததாக, துப்பாக்கியால் சுட்ட நபர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here