புது தில்லி, நவ.5 தேசிய கீதமான ‘ஜன கண மன’ மற்றும் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ ஆகியவை “ஒரே அளவில் நிற்கின்றன” என்றும், குடிமக்கள் இரண்டுக்கும் சமமான மரியாதை காட்ட வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய கீதத்தைப் போல ‘வந்தே மாதரம்’ பாடுவது அல்லது இசைப்பது பற்றி தண்டனை விதிகள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்த பாடல் இந்தியர்களின் உணர்ச்சிகளிலும் ஆன்மாவிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.
‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை மற்றும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல வழக்குக்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது.
தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகிய இரண்டும் அதன் சொந்த புனிதத்தன்மை மற்றும் சமமான மரியாதைக்கு தகுதியானவை என்பதை வலியுறுத்தியது மத்திய அரசு.