பாரதத்தின் பொருளாதாரம் சரிவு அடைந்து வருவதாக இங்குள்ள எதிர்க்கட்சிகளும் சார்பு ஊடகங்களும் குறை கூறிவரும் நிலையில் பாரதத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாக அமெரிக்க நிதியமைச்சர் ஜெனட் யெல்லன் தெரிவித்துள்ளார். “கொரோனாவின்போது எல்லா நாடுகளையும் போலவே பாரதத்தின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்புக்கு பின்னர் பாரதப் பொருளாதாரம் விரைவாக மீண்டுள்ளது. அப்போதில் இருந்து அதன் பொருளாதாரத்தின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக பாரதம் உள்ளது. பாரதப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று நான் நம்புகிறேன். இதனால், அன்னிய நேரடி முதலீடுகளை பாரதம் அதிக அளவு ஈர்த்துள்ளது. அதன் அடிப்படை பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. பாரதத்துடன் அமெரிக்கா வலுவான நல்லுறவை கொண்டுள்ளது. மேலும் வர்த்தக தொடர்புகளை அதிகப்படுத்துவதை அமெரிக்க அரசு விரும்புகிறது. இருநாடுகளிடையே வர்த்தக தொடர்பு அதிகரித்தால் இரு நாட்டு மக்களும் பயனடைவார்கள். சர்வதேச விதிகளில் இருநாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பாரதம் ஏற்க உள்ளது மிகச் சிறந்த அம்சம். பாரதத்தின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும். நவம்பர் 11ம் தேதி பாரத அமெரிக்க பொருளாதார நிதி ஒத்துழைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நான் பங்கேற்க உள்ளேன். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன்” என கூறியுள்ளார்.