திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஒரு மனுவில், “தமிழகத்தில் உள்ள ஆதீன மடங்களில் பழமையானது தருமபுர ஆதீன மடம். இந்த மடத்துக்கு தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். திருச்சி உய்யக்கொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவநாதர் கோயில் ஆதீன மடத்துக்கு சொந்தமானது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் ஆதீன மடத்துக்கு சொந்தமானது என ஏற்கெனவே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் அந்த நிலம் இன்னும் மீட்கவில்லை. எனவே நிலத்தை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்யநாராயணாபிரசாத் அடங்கிய அமர்வு, ”கோயில் நிலங்களை மீட்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். இந்த வழக்கில் கோயில் சொத்தை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.