கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, “அரசியல் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் சமீபகால நிகழ்வுகள்தான். பல லட்சம் ஆண்டுகளாக நாம் அரசியல் ரீதியாக துண்டு துண்டாக பிளவுபட்டுக் கிடந்தோம். கேரள மாநிலத்துக்கென்று மாபெரும் கலாசாரம் இருக்கிறது. இது பாரதத்தின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கேரள மக்களுக்குத்தான் இந்த பெருமை சேரும். ஆன்மிகவாதியான நாராயண குரு போன்றவர்கள் இந்தப் பெருமைக்குரியவர்கள். கேரளாவில் கடுமையான ஒடுக்குமுறைகள் இருந்தன. இதுபோல நெருக்கடியான தருணங்கள் ஏற்படுகிறபோதெல்லாம் உன்னதமான ஆத்மாக்கள் வெளிப்பட்டன. 1947ம் ஆண்டுக்குப் பின்னர் சர்தார் வல்லபாய் படேல் பாரதத்தை ஒன்றுபடுத்தியதால், நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடு என ஆக முடிந்தது. ஆனால் இதற்கான உண்மையான பெருமை கேரள மண்ணின் மைந்தரான ஆதி சங்கரருக்குத்தான் சேரும். அவர்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே பாரத மக்களுக்கு அவர்களது கலாசார, ஆன்மிக ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்” என கூறினார். மேலும், “கேரளா, பாரதத்தின் அறிவு மையமாக மட்டுமின்றி, உலகின் அறிவு மையம் ஆகவும் மிகவும் பொருத்தமானது. அதன் வானிலை அத்தனை இதமானது. இந்த வானிலை மிகவும் குளிராகவோ அல்லது மிகவும் வெப்பமாகவும் இல்லை. அறிவு தேடுவோருக்கு இது மிகவும் உகந்ததாகும்” என்றார்.