கீதா ஜெயந்தி கீதை உபதேசிக்கப்பட்ட நாள்

0
247

ஜெயந்தி என்பது அவதார புருஷர்கள் மகான்கள் ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் வைபவம். ஆனால் ஞானத்தைப் போதிக்கும் ஒரு நூலுக்கும் இத்தகைய அந்தஸ்து உண்டு. அது பகவத் கீதை.
பகவத் கீதை பிறந்த நாள்தான் கீதா ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. குருக்ஷேத்திரத்தில் நடந்த மகாபாரத யுத்தத்தில், துவக்கத்தில் யுத்தம் செய்ய மனம் துவண்ட அர்ஜூனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தது மார்கசீர்ஷ மாதத்தில் வளர்பிறை ஏகாதசியன்று தான். அந்நாளே கீதா ஜெயந்தி என்று பெயரில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
ஹரியானா மானிலத்தில் உள்ள குருக்ஷேத்திரத்தில் இது பெருந்திருவிழாவாக ஐந்து தினங்களுக்கு கொண்டாடப்படுகிறது.
பிரம்மசரோவரத்தில், தீப வரிசைகள் ஒளிர, உள்ளத்தில் ஞான ஒளி வீச வேண்டி, கீதையைப் பாராயணம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுகின்றார்கள்.
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் முதல்நாள் கௌரவர் படைகளைப் பார்த்ததும் அர்ஜுனனுக்கு குழப்பம் ஏற்பட்டது. “நமது உற்றார்- உறவினர், குரு ஆகியோருடன் போரிட்டு, அவர்களைக்கொன்று, இழந்த ராஜ்ஜியத்தைப் பெறுவது அவசியம்தானா?’ என்று சிந்தித்தான்; மனம் வருந்தினான்.காண்டீவத்தைக் கீழே வைத்தவன் தேரோட்டியான கிருஷ்ணரின் முகத்தைப் பார்த்தான். அர்ஜுனன் மனதில் உள்ளதை அறிந்த பகவான், அவனுக்கு உபதேசம் செய்தார். அதுவே “பகவத் கீதை’ என்று போற்றப்படுகிறது. மேலும், அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டியும் அருளினார். பகவத் கீதையானது “18′ அத்தியாயங்களில் “701′ சுலோகங்களாக அமைந்துள்ளது. இவற்றில் மானிடர்கள் அமைதியாக வாழ, கடைப்பிடிக்கவேண்டிய கர்மம் மற்றும் தர்மம் ஆகியவற்றை பகவான் அருளியுள்ளார்.
“பகவத்’ என்றால் இறைவன்; “கீதா’ என்றால் நல்லுபதேசம். இதற்கு இன்னொரு பொருள் சொல்வதும் உண்டு. “கீதா’ என்ற சொல்லை வேகமாகச் சொல்லிலிக்கொண்டே வந்தால் “தாகீ’ என்று மாறும். “தாகீ’ என்றால் “தியாகம்’ என்று பொருள். வாழ்வில் வரும் சுகதுக்கங்களையும், இன்பதுன்பங்களையும் பகவானிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்பது இதன் தத்துவமாகும். “துறவு கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்’ என்பதும் “கீதா’விற்குரிய ஆழமான பொருளாகும்.
அர்ஜுனன் தன் உற்றார், குருமீது அம் பெய்யத் தயங்கியபோது, “தர்மத்தைக் காக்க அவர் களை அழிப்பதில் தவறில்லை. அதற்குரிய பலன்கள் என்னையே சேரும்’ என்று கிருஷ்ணர் அருளினார். எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்துவிடவேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவேதான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. பகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்தபின், எந்த பிரதிபலனையும் பற்றிக் கருதாமல் தன் கடமையைச் செய்தான். எதிர்திசையிலிருக்கும் கௌரவர்கள்மீது சரமாறி அம்புகள் எய்தான். கௌரவர்கள் வீழ்ந்தார்கள்.
பகவத் கீதா ஜெயந்தி மார்கழி வளர்பிறை ஏகாதசியாகும்.தென் பாரதத்தில் கார்த்திகை
வளர்பிறை ஏகாதசியே கீதா ஜெயந்தி ஆகும்.
எத்தகைய துன்பத்தில் இருப்போரும், பகவத் கீதையை ஒரு முறை பாராயணம் செய்ய, தெளிவு பெறுவது நிச்சயம். இறைவனின் அமுதவாக்காக வெளிவந்த பகவத் கீதையை, இறைவனுக்குச் சமமாக வழிபடுகின்றோம்.
உபநிஷதங்களில் இருக்கும் அரிய கருத்துக்களின் சாராம்சமே பகவத் கீதை.
கீதா சாரம்:
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
கீதா ஜெயந்தி அன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும், கீதை நூலுக்கும் பூஜைகள் செய்து, மலரிட்டு வணங்கி
நம்மால் இயன்றவரை, பகவத் கீதையைப் பாராயணம் செய்வோம்.
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here