1971-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13 நாள்கள் நீடித்த இந்தியா – பாகிஸ்தான் போர் டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, இந்திய ராணுவம் மற்றும் முக்தி-பாஹினி கூட்டுப் படைகள் முன் சரணடைந்தார். இந்தப் போரின் முடிவு வங்கதேசம் என்ற புதிய நாடு உருவாக வழிவகுத்தது.
பாகிஸ்தான், வங்காள மொழி பேசும் மக்களை மோசமாக நடத்தியதோடு, தேர்தல் முடிவுகளில் குளறுபடி செய்தது. இதனால், கிழக்கு பாகிஸ்தானில் வசித்துவந்த மக்கள் ஆத்திரமடைந்தனர். எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரை அந்தப் பகுதி மக்கள் தொடங்கினர். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வங்கதேச விடுதலைப் போருக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த இன்றைய வங்கதேசம், பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைக்குள்ளானது.
இனப்படுகொலைக்குள்ளான வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இந்தியா களம் இறங்கியதால் 1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்தியாவும், வங்கதேச விடுதலை ராணுவமான முக்தி – பாஹினியும் இந்த யுத்தத்தில் பாகிஸ்தானை வீழ்த்திக்கொண்டே வந்தன. ஒரு வீட்டில் ஒரே சமயத்தில் மூன்று குண்டுகள் விழுந்த அளவுக்குத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு, 1971 டிசம்பர் 15-ம் தேதி இரவு போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியது.
அதையடுத்து, டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள், ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்திய ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜெக்ஜித்சிங் அரோரா தலைமையிலான கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர். பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் சரணடைந்ததால், கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற தனிநாடாக உருவானது.