‘மாதங்களில் நான் மார்கழி’ கண்ணனின் அமுதமொழி. இம்மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற புண்ணிய தினங்கள் வருகின்றன. அதே நேரம் ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான் என்பது பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய சேதி.
கிருதயுகத்தில்தேவர்கள் உட்பட அனைவரையும் அசுரனான முரண் துன்புறுத்திக்கொண்டிருந்தான். தேவர்களின்வேண்டுகோளை ஏற்று, திருமால், முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பின்னர், போனால் போகட்டும் என்று அவன் திருந்துவதற்கு வாய்ப்புக்கு கொடுத்தார். யுத்தக்களத்தினின்று நீங்கி, பத்ரிகாசிரமத்தில் இருந்த குகை ஒன்றில் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். குகைக்கு வந்த முரன், அவரைக் கொல்ல வாளை எடுத்தான். அப்போது, திருமாலின் திருமேனியிலிருந்து ஆயுதங்கள் பலவும் தாங்கிய அழகான பெண் ஒருத்தி தோன்றினாள். முரனை யுத்தத்துக்கும் அழைத்தாள். முரனோ அவளைக் கொல்ல ஓர் அம்பே போதும் என்று அலட்சியத்துடன் அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், ‘ஹூம்’ என்று ஓர் ஒலியை எழுப்பினாள். அவ்வளவுதான், நொடியில் பிடி சாம்பலாகிப் பொசிந்தான் முரண். நடந்தவை யாவும் தெரியாததுபோல் கண்விழித்த திருமால், அந்த பெண்ணை பாராட்டினார். அவளுக்கு ஏகாதசி என்ற பெயரை சூட்டி, ”ஏகாதசியே, நீ உதித்த இந்நாளில் விரதமிருந்து என்னை நாடி வந்து வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்” என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும்.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது இந்த வைகுண்ட ஏகாதசி.
நான்முகனார்ஒருமுறை அகங்காரத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தார். அதனை ஒடுக்க நினைத்த திருமால், தமது செவிகளிலிருந்து இரண்டு அசுரர்களை வெளிப்படச் செய்தார். மது, கைடபர்கள் என்ற பெயர் கொண்டிருந்த அவர்கள் நான்முகனைக் கொல்ல முயன்றபோது திருமால் தடுத்து, நான்முகனை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தாம் ஈவதாகவும் தெரிவித்தார். மது கைடபர்களோ, திருமாலுக்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர். திருமாலும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்தார்கள். அதனால் தங்களை ஒருவாறுசமாளித்துக்கொண்டு தங்களுடன் திருமால் ஒரு மாத காலம் போர் புரிய வேண்டும் என்றும் அதன் பிறகே அவர்கள் சித்தி பெற வேண்டும்” என்று வேண்டினார்கள். அப்படியே வரம் தந்த திருமால், யுத்த முடிவில் அவர்களை வீழ்த்தினார்.
திருமாலின் மகிமைகளை உணர்ந்த மது கைடபர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்று கேட்டனர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் இணைத்துக் கொண்டார். அத்தோடு நில்லாமல், அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ”பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்கு ஆசிர்வதித்ததை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் வடக்கு வாசலான சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வழிவகுக்க வேண்டும்” என்று வேண்டினர். அசுரர்கள் வேண்டிக்கொண்டபடியே வரம் அருளினார் திருமால்.
ஆர் கிருஷ்ணமூர்த்தி