மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் இணைந்து கடந்த 5 மற்றும் 6 தேதிகளில் இசை மற்றும் நாட்டிய பரம்பரை பற்றிய ‘தாரா’ என்னும் நிகழ்ச்சியை தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடத்தியது. ‘தாரா’ என்பது விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், பாரத அறிவு அமைப்புகளின் பல களங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடத்தப்படும் மாநாடுகளின் தொடர் ஆகும். நமது கலை மரபுகள் புத்துயிர் பெறவும், பிரபலப்படுத்தவும், உரிய சூழல்களை உருவாக்கவும், சவால்களை திறம்பட எதிர்கொள்ளவும் ஒரு தொலைநோக்கு ஆவணம் 2047ஐ உருவாக்குவதே இதன் நோக்கமாகும். டாக்டர் பத்மா சுப்ரமணியம் (தலைவர், நிருத்யோதயா), பேராசிரியர் காந்தி எஸ் மூர்த்தி (தேசிய ஒருங்கிணைப்பாளர், ஐ.கே.எஸ் பிரிவு), டாக்டர் ஆர். சந்திரமௌலி (பதிவாளர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்), சீனிவாசன் போன்ற உயரதிகாரிகள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் பத்மா சுப்ரமணியம் தமது சிறப்புரையில், “பாரதத்தின் வளமான பாரம்பரியத்தின் பெருமையைப் பாதுகாக்க வேண்டும். பாரதக் கலைகள் நம்மில் உள்ள தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொள்வதற்கான ஒரு பாதை. நமது கலை வடிவங்களை மதிப்பவர் களாக தேசத்தின் இளைஞர்கள் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அடுத்த இரண்டு நாட்களில் நடந்த தொடர்ச்சி யான குழு விவாதங்களில், இசை மற்றும் நிருத்யாவில் கர்நாடக, ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற பயிற்சியாளர்கள், ஆராய்ச்சி யாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.