1. மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் அருகேயுள்ள சிச்லி என்ற கிராமத்தில் ஜனவரி 12, 1918 பிறந்தவர். மகேஷ் பிரசாத் வர்மா என்பது இவரது இயற்பெயர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை, இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அறிவியல் பயின்றாலும் இவர் மனம் ஆன்மிகத்திலேயே மூழ்கியிருந்தது.
2. 1939-ம் ஆண்டு பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடரானார். தன் சீடருக்கு அவர் ‘பால் பிரம்மச்சாரி மகேஷ்’ என்று பெயர் சூட்டினார். 12 ஆண்டுகள் அவரிடம் தியானம், யோகம் உள்ளிட்டவற்றைக் கற்றார். 1953-ல் இமயமலைச் சாரலில் ஆசிரமம் அமைத்து, ஆழ்நிலைத் தியானத்தை போதித்து வந்தார். 1957-ல் சென்னையில் தியான மையம் தொடங்கினார்.
3. மன வலிமையாலும் பிரார்த்தனையாலும் எத்தகைய அற்புதங்களையும் சாதிக்க முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச்சொன்னார். ‘மகரிஷி’ என்று அழைக்கப்பட்டார். ரிஷிகேஷில் சர்வதேச ஆசிரியர் பயிற்சிப் பாடத் திட்டத்துக்கான அமைப்பைத் தொடங்கினார்.
4. 1959-ல் லண்டனில் ஆன்மிக மீளுருவாக்க இயக்க மையத்தைத் தொடங்கினார். கனடா, டென்மார்க், ஜெர்மனி, பிரிட்டன், மலேயா, நார்வே, ஆஸ்திரேலியா, கிரேக்கம், இத்தாலி, கிழக்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இவரது தியான மையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலும் நிறைய நிர்வாக மையங்களைத் தொடங்கி, ஆழ்நிலை தியான உத்திகளைக் கற்றுத் தந்தார்.
5. ‘சயின்ஸ் ஆஃப் பீயிங் அன்ட் தி ஆர்ட் ஆஃப் லிவிங் டிரான்சென்டென்டல் மெடிடேஷன்’, ‘மெடிடேஷன்ஸ் ஆஃப் மகரிஷி மகேஷ் யோகி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். அன்றாட வாழ்வில் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
6. 1971-ல் அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் ‘மகரிஷி யுனிவர்சிட்டி ஆஃப் மேனேஜ்மென்ட்’ என்ற உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. இங்கு ஆழ்நிலை தியானம், யோகம் ஆகியவற்றுடன் பாடத் திட்டங்களும் இணைக்கப்பட்டன.
7. நவீன அறிவியலுடன் வேத அறிவியலை இணைப்பதற்கான பல கல்வி நிறுவனங்களைப் பல்வேறு நாடுகளில் தொடங்கினார். மனித குலத்தை அமைதி மற்றும் நல்லிணக்கம் நோக்கி வழிகாட்டும் குருவாகப் போற்றப்பட்ட மகரிஷி மகேஷ் யோகி.