கோயிலில் அனைத்து பக்தர்களும் சமம்

0
220

சிவகங்கையைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் சன்டிவீரன் சுவாமி கோயில் மற்றும் பெரிய கோட்டை முத்தையனார் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் தைத் திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது கோயில் நிர்வாகம் தரப்பில் யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சசிபாண்டிதுரை என்பவர் அவருக்கு முதல் மரியாதை செய்யுமாறும், சிறப்பு மரியாதை செய்யுமாறும் அழுத்தம் கொடுத்து வருகிறார். விழாவின் போது அவருக்கு தலப்பாகை கட்டி கையில் குடையை ஏந்தியவாறு அவரது ஆட்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். பல்வேறு சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் இந்த விழாவில், அவருக்கு மட்டும் சிறப்பு மரியாதை வழங்குமாறு கோயில் பூஜாரிகளை வற்புறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் நடைபெறும் தைப் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, அவரது ஆட்களுடன் பரிவட்டம் கட்டி, கையில் கோலுடன், குடை பிடித்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடை விதிப்பதோடு, யாருக்கும் எந்த முதல் மரியாதையும் சிறப்பு மரியாதையும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “இது போன்ற வழக்குகள் புதிது அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக் கூடாது. அனைத்து பக்தர்களும் கிராம மக்களும் சமமாகவும் சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். கோயிலுக்குள் அனைவரும் சமமானவர்களே என அந்த உத்தரவுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவுகள் இந்த வழக்குக்கும் பொருந்தும். விழாவை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here