மகத்துவம் மிக்க மாட்டுப் பொங்கல்

0
190

கால்நடைகளுக்கு உரிய விழா மாட்டுப்பொங்கல். இவ்விழா பசுக்கள், காளைகள் மற்றும் இதர கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. உலகிலேயே பாரத நாடுதான் பசுக்கள் மற்றும் காளை மாடுகளுக்கு அவைகள் பெற வேண்டிய உயர்ந்ததொரு அந்தஸ்த்தைக் கொடுத்து வருகிறது என்பதை இங்குள்ள மக்கள் அன்றாடம் வீடுகளிலும், கோவில்களிலும் பூஜிப்பதிலிருந்தும், விழாக் கொண்டாடுவதிலிலிருந்தும் அறியலாம். ஏனெனில் பசுக்கள் வளமான பாலைத் தருகின்றன. பால் உணவாக, மருந்தாக, இறை அபிஷேகப் பொருளாக உள்ளது. காளை மாடுகள் விவசாய வேலைகளில் அதிக அளவு ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்நாளில் தங்கள் இல்லத்து மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து, பூஜை செய்து தமிழர்கள் வழிபடுகிறார்கள். மாடுகளை பெருமைப்படுத்தும் விதமாக இல்லங்களுக்கு முன் வாசலில் வண்ண வண்ணமாய்க் கோலம் போட்டு வீட்டு வாசல்களை அலங்கரிக்கிறார்கள். கரும்பு, மஞ்சள், பொங்கல் பானை போன்ற கோலங்கள் போடுவது எளிது. ஆனால் சற்றே கடினமான மாட்டுக் கோலம் கூட கண்ணைக் கவரும் வகையில் வெகு நேர்த்தியாகப் போடும் மாதர்கள் ஏராளம்.

மாட்டு என்ற தமிழ்ச்சொல் பசு மற்றும் காளையையும், பொங்கல் எனும் சொல் வளமையையும் குறிக்கிறது. மாட்டுப்பொங்கல் விழா நெல் அறுவடை தொடங்கியிருக்கிறது என்பதைக் குறிக்கிறது. சிவபெருமானுடைய காளையான நந்திக்கும், மாட்டுப் பொங்கல் விழாவிற்கும் இடையே நெருங்கிய தொடா்பு உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. இன்று அரிசி பாசிப்பருப்பு, முந்திரி, உலர் திராட்சை மற்றும் வெல்லம் கலந்த இனிப்பான சுவைமிகு சாக்கரைப் பொங்கலை மிகச் சிறப்பானதொரு முறையிலே சமைக்கிறார்கள். பூஜைகள் முடிந்த பின்னர், பொங்கலைத் தங்களின் கால்நடைகளுக்கு முதலில் ஊட்டுவதும், பிறகு தங்களைச் சுற்றி இருக்கும் மக்களுக்குக் கொடுத்து மகிழ்வதும், பொங்கல் கால்நடை பிரசாதம் அல்லது மாட்டுப் பிரசாதம் என்று இதனை அழைப்பதும் நமது மரபு. உலகில் மரபை கட்டிக்காப்பதில் நமக்கு நிகர் நாம்தான்.

விழாவின் இன்னுமொரு முக்கிய சிறப்பு அம்சம் மஞ்சு விரட்டு. இன்று தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் இவ்விளையாட்டு இன்றும் மிக உற்சாகமாக நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடலின் வாடி வாசலில் இருந்து பயிற்சி கொடுக்கப்பட்டு, கட்டவிழ்க்கப்பட்டு, சீறிக்கொண்டு பாய்ந்து ஓடிவரும் காளை மாடுகளை, இளைஞா்கள் விரட்டிப் பிடித்து கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் பணமுடிப்பை எடுப்பா்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here