மெல்போர்ன் மில் பார்க் பகுதியில் உள்ள பிஏபிஎஸ் சுவாமிநாராயண் கோயிலை காலிஸ்தானி பயங்கரவாதிகள் நாசப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மில் பார்க் புறநகரில் அமைந்துள்ள கோயிலின் சுவர்களில், ஹிந்துக்கள் மற்றும் பாரதத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. தனது முதல் பெயரை வெளியிட விரும்பாத படேல் என்ற நபர் இதுகுறித்து கூறுகையில், ஜனவரி 12 அன்று நான் அந்த இடத்திற்குச் சென்றபோது, கோயிலின் சுவர்கள் நாசப்படுத்தப்பட்டு இருபதை கண்டேன். அனைத்து சுவர்களும் ஹிந்துக்கள் மீதான காலிஸ்தானி வெறுப்பின் கிராஃபிட்டிகளால் வர்ணம் பூசப்பட்டிருந்தன” என்று கூறினார். பிஏபிஎஸ் ஸ்வாமிநாராயண் கோயில் நிர்வாகம் அதன் அறிக்கையில், தாங்கள் இந்த அழிவு மற்றும் வெறுப்புச் செயல்களால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாகவும் அமைதியான சகவாழ்வு மற்றும் அனைத்து மதங்களுடனும் உரையாடல் ஆகியவற்றில் தாங்கள் எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் நகர நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை துவக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஒரு வீடியோ செய்தியில் பிரமுக் சுவாமி மகராஜ் ஜி மற்றும் அவரது 100வது பிறந்தநாளை முன்னிட்டு பிஏபிஎஸ் அமைப்புக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் சிட்னியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான புதிய பிஏபிஎஸ் கோயிலின் திறப்பு விழாவை தான் எதிர்நோக்குவதாகவும் கூறியிருந்தார்.