இந்திய ரயில்வே தனது பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயிலை “ஸ்ரீ ராம் ஜானகி யாத்ரா: அயோத்தி முதல் ஜனக்பூர் வரை” என்ற சிறப்புப் பயணத்தில் பாரதத்தின் அயோத்தியில் இருந்து நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் வரை இயக்க உள்ளது. பிப்ரவரி 17, 2023 அன்று டெல்லியில் இருந்து இந்த சுற்றுலா ரயில் புறப்படும். இந்த உத்தேச 7 நாள் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் பயணமானது, ஸ்ரீராமர் பிறந்த அயோத்திக்கு சென்று அங்கிருந்து நந்திகிராம், சீதாமடி, காசி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்கள் வழியாக பயணிக்கும். இங்கெல்லாம் உள்ள புனித தலங்களை தரிசித்துக்கொண்டே செல்லும் சுற்றுலாப் பயணிகள், சீதாமடி ரயில் நிலையத்திலிருந்து 70 கி.மீ தொலைவிற்கு பேருந்தில் பயணித்து நேபாளத்தில் உள்ள ஜனக்பூருக்குச் சென்று ராம் ஜானகி கோயில், சீதா ராம் விவாக மண்டபம் மற்றும் தனுஷ் தாம் ஆகியவற்றை தரிசிப்பார்கள். முதல் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு என இரண்டு வகையான தங்கும் வசதிகளுடன் கூடிய இந்த டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலில் இரண்டு டைனிங் ரெஸ்டாரன்ட்கள், ஒரு நவீன சமையலறை, பெட்டிகளில் ஷவர் க்யூபிகல்கள், சென்சார் அடிப்படையிலான வாஷ்ரூம் செயல்பாடுகள், கால் மசாஜர்கள் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் அம்சங்கள் உள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.39,775 முதல் கட்டணங்கள் தொடங்குகின்றன. இந்த கட்டணங்களை செலுத்த இ.எம்.ஐ வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார உறவுகளையும் மேம்படுத்தும்.