உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு ஜனவரியில் கோயிலை பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கும் வகையில் அங்கு கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கோயில் கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் மூலம் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், இதற்காக நேபாளம் வழியாக பாரதத்துக்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்ய ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினரும் உத்தரப் பிரதேச காவல்துறையும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.