கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம்தேதி | ‘அக்னிபாத்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தின் தரைப்படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றில்
17.5 வயது முதல் 21 வயது கொண்ட இளைஞர்கள் சேர்க்கப்படுவர். 4 ஆண்டுகள் அக்னி வீரர்களாக பணியாற்றுவார்கள். இந்த குறுகிய கால ராணுவ சேவை திட்டத்தில் சேர்ந்து வெற்றிகரமாக 4 ஆண்டுகள் சேவையை முடித்து வெளியேறும்போது அவர்களுக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும். அவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்க பொது மற்றும் தனியார் துறைகள் காத்திருக்கின்றன. மேலும், அவர்கள் சுயதொழில் தொடங்கவும் வசதிகள் பயிற்சி வசதிகளும் உண்டு. ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் அக்னி வீரர்கள் இதில் சேர்க்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த வீரர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலிகாட்சி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது தேசத்துக்காக செய்ய வேண்டிய கடமைகள் குறித்து அக்னிவீரர்களிடம் எடுத்துரைத்தார். மேலும், “நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி திட்டம் முக்கியத்துவம் பெற்று விளங்கும். இளைய அக்னி வீரர்கள், நமது ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள்” என்றார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப்படை தளபதிகளும் இதில் காணொலிகாட்சி வாயிலாக இதில் பங்கேற்றனர்.