முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், தில்லி கன்டோன்மெண்டில் நடைபெறும் 2023-ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமை ஜனவரி 17, 2023 அன்று நேரில் சென்று பார்வையிட்டார். முப்படைகளின் தலைமைத் தளபதி ஒருவர் தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமை நேரில் சென்று பார்வையிடுவது இதுவே முதல் முறையாகும்.
ஜெனரல் அனில் சௌகானுக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் வீரர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். அதைத்தொடர்ந்து தேசிய மாணவர் படை வீரர்களின் வாத்திய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருட்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் தேசிய மாணவர் படை வீரர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘கொடி பகுதியையும்’ அவர் பார்வையிட்டார். முன்னாள் தேசிய மாணவர் படை வீரர்களின் புகைப்படங்கள், மாதிரிகள் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட “ஹால் ஆஃப் ஃபேம்” என்ற கூடத்தையும் முப்படைகளின் தலைமைத் தளபதி பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து வீரர்களின் கலை நிகழ்ச்சிகளையும் இதர விருந்தினர்களுடன் சேர்ந்து ஜெனரல் அனில் சௌகான் கண்டுகளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் இளைஞர்களிடையே ஒழுக்கம், தலைமைப் பண்பு, நட்புணர்வு போன்ற குண நலன்களை புகுத்துவதில் தேசிய மாணவர் படையின் பங்களிப்பு போற்றத்தக்கது என்று கூறினார். 75 ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் தேசிய மாணவர் படைக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்த முப்படைகளின் தலைமைத் தளபதி, ஏராளமான விளையாட்டு நிகழ்ச்சிகளில் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தும் தேசிய மாணவர் படை வீரர்களைப் பாராட்டினார்.