தேர்வு கால மன அழுத்தத்தை கையாள்வது குறித்து சிபிஎஸ்இ மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களுக்கு சென்னையில் இன்று (20 ஜனவரி 2023) இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கின் கலந்துரையாடல் அமர்வின் சிறப்பு விருந்தினராக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல மருத்துவக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் பூர்ண சந்திரிகா கலந்துகொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தேர்வுகால மனஅழுத்தத்தை கையாள்வதற்கு நேர நிர்வாகம், யதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரித்தல், குடும்பம் மற்றும் நண்பர்களிடம் உதவி கோருதல் போன்ற உத்திகள் பற்றி திருமதி சந்திரிகா எடுத்துரைத்தார். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட சுயகவனிப்பும், சுய பொறுமையும் முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.
தேர்வுகாலத்திலும், வாழ்க்கை முறையிலும் ஏற்படும் பல்வேறு அம்சங்கள் குறித்து சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் தீர்வு காண்பது பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் இந்தக் கருத்தரங்கில் விவாதித்தனர். வரவிருக்கும் பிரதமர் மோடியின் தேர்வு குறித்த விவாதம் என்ற நிகழ்வின் பின்னணியில் இந்த தனித்துவமான இணைய வழி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமரின் தேர்வு குறித்த விவாதத்தின் ஆறாவது நிகழ்வு 2023 ஜனவரி 27 அன்று நடைபெறும்.