டெல்லியின் பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் ஜனவரி 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்று வரும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் (டி.ஜி.பி, ஐ.ஜி.பி) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த 3 நாள் மாநாடு நேரடி மற்றும் காணொலி என இருவகைகளிலும் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்றுள்ளனர். மற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டுள்ளனர். இணையதளக் குற்றங்கள், காவல்துறையின் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பில் உள்ள சவால்கள், இடதுசாரி பயங்கரவாதம், திறன் கட்டமைப்பு, சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டகருப்பொருள்கள்குறித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளைக் கொண்ட விரிவான கலந்துரையாடல்களும் இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ளன. 2014ம் ஆண்டு முதல் காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். முந்தைய காலங்களில் பிரதமர்கள் இக்கூட்டங்களில் பெயருக்கு பங்கேற்றது போல் அல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்று வருகிறார். கருத்துக்களை பொறுமையாக கேட்பதுடன் புதிய சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைப்பதற்கான முறைசாரா விவாதங்களையும் ஊக்குவித்து வருகிறார். இந்த நடைமுறை காவல்துறை உயர் அதிகாரிகள், பிரதமரிடம் நேரடியாக உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை எடுத்துரைக்க உதவுகிறது. அத்துடன் காவல்துறை அதிகாரிகள் வெளிப்படையாக தங்களது பரிந்துரைகளையும் வழங்க முடிகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் இந்த மாநாடு, நிகழ்கால பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும்.