ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீட்டு வழக்கு

0
181

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய அரங்கத்திற்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கெனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு. பி.எப்.ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே காலக்கட்டத்தில் பிற அமைப்புகளுக்கு சுமார் 500 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமானது. மேலும், ஒருபுறம் அமைதி பூங்கா எனக்கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என கூறி அனுமதி மறுத்துள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டது.

அப்போது தமிழக அரசு மற்றும் காவல் துறை தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அடங்கும். 500 இடங்களில் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்கு அல்ல. வால்பாறை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பி.எப்.ஐ அமைப்புக்கு தடைக்கு பின்னர், நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உளவுத் துறை அறிக்கை அடிப்படையில்தான் காவல் துறை செயல்பட்டது. எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து, தமிழகம் அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புகிறது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவற்றை தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்” என்று கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here