பாரதத்தை அழிப்பதாகவும் காஷ்மீரை கைப்பற்றுவதாகவும் கூறிக்கொண்டு கடந்த 75 ஆண்டுகளாக பயங்கரவாதம், ஊழல், போதைமருந்து கடத்தல், கள்ளநோட்டு என பல்வேறு வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான், தற்போது ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற வார்த்தைக்கு ஒரு நிகழ்கால உதாரணமாக திகழ்கிறது. அங்கு தற்போது பயங்கரவாத செயல்பாடுகள், வேலை வாய்ப்பின்மை, அரசு மற்றும் ராணுவத்தினரின் ஹிமாலய ஊழல்கள், தனி நாடு கோரிக்கைகள் போன்றவை பெருகி வருகின்றன. மற்றொரு புறம் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது. விலைவாசி ஏற்றம், அன்னிய செலவாணி தட்டுப்பாடு, எரிபொருள் தடுப்பாடு, மின்சார தட்டுப்பாடு உட்பட பல்வேறு நெருக்கடிகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நாடு தழுவிய மின்சார தட்டுப்பாடு, உள்நாட்டு போராட்டங்கள், பயங்கரவாத சம்பவங்கள் போன்றவை இதற்கு சிறந்த உதாரணம். இதனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் அதன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்து, 17 சதவீதமாக வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இது 1997க்கு பிறகு மிக அதிகமான விகிதமாகும். கடந்த செப்டம்பர் 2021ல் இருந்து வட்டிவிகிதம் மொத்தமாக ஆயிரம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் அன்னிய செலவாணி கையிருப்பும் மிக குறைவாகவே காணப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் திவால் நிலைக்கு விரைவில் தள்ளப்படலாம் என்ற கருத்துகள் பரவி வரும் நிலையில், இந்த வட்டிவிகித அறிவிப்பு இனி பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சத்தை பாகிஸ்தான் மக்களிடம் எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார், இஸ்லாமிய மத சட்டங்களின் படி, வட்டிக்கு கடன் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப பாகிஸ்தான் அரசு வட்டியில்லா வங்கி முறையை விரைவில் அறிமுக்கப்படுத்தும். இந்த சேவை 2027ம் ஆண்டிற்குள் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போதைய சூழலில், வட்டி வசூலித்தாலும் பரவாயில்லை. ஆனால் 17 சதவீத வட்டி என்பதெல்லாம் மிகவும் அதிகம். இது பாகிஸ்தான் மக்களை மேலும் வறுமை கோட்டுக்கு கீழே கொண்டு செல்லும் என அந்நாட்டு மக்கள் புலம்பி வருகின்றனர்.