தியாகத்தை அங்கீகரிக்க வேண்டும்

0
201

பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி எழுதியுள்ள கடிதத்தில், “தேசம் விடுதலை அடைந்ததன் மிகப்பெரும் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் நாம் கொண்டாடுகிறோம். நம் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இது, நமது சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு கலாசாரம் மற்றும் பாரதத்தின் சாதனையை சொல்கிறது. நாடெங்கும் நடைபெற்ற இந்த நீண்ட சுதந்திர போராட்ட களத்தில், முன்னணியில் இருந்து செயல்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தவிர பல வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு மக்களுக்கு அறியப்படாமலேயே போனது. அவர்களை கெளரவப்படுத்தவும் அவர்கள் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கடமையும் நம் முன் உள்ளது. இதேபோல நமது தமிழகத்திலும் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட பல தியாகங்களை செய்துள்ளனர். இவர்களில் பலரது தியாகங்களும் பங்களிப்புகளும் மக்களுக்கு அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசம் அதற்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கால தலைமுறை அறிய அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக, உங்கள் பல்கலைக் கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நியமிக்க வேண்டும்.

ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் கண்டு, அவர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்காக ஃபெல்லோஷிப் வழங்கப்படும். இதனை முடிக்க ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படலாம், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெருமை தருவதாகவும் அமையும். இந்த ஆராய்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து அவ்வப்போது ஆளுநர் மாளிகைக்கு தெரிவிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here