ஸ்ரீராமர் சிலைவடிக்க சாலிகிராமக் கல்

0
98

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலில் கர்பகிரகத்தில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீராமர் மற்றும் ஜானகி தேவி சிலைகளை வடிப்பதற்கான சாலிகிராம கற்கள் நேபாளத்திலிருந்து அயோதிக்கு கொண்டுவரப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்பாடைக்கப்பட்டன. அயோத்தியில் ஸ்ரீராம ஜென்ம பூமியில் பகவான் ராமருக்கான கோயில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் கோயிலின் தரைத்தளம் தயாராகி விடும். 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி மகர சங்கராந்தி நாளில், கோயிலின் கர்ப்பகிரகத்தில் ஸ்ரீராமர் சிலைகள் நிறுவப்படும். அதனை தொடர்ந்து ஸ்ரீராமர் கோயில் பக்தர்களுக்கு திறந்து விடப்படும். கடந்த மாதம் 2ம் வாரத்துடன், அயோத்தி ஸ்ரீராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என இந்த பணிகளை மேற்பார்வையிட்டு வரும் ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கர்பகிரகத்தில் உள்ள ஸ்ரீராமரின் விக்கிரகத்தில் தினமும் சூரிய ஒளி அவரது நெற்றியில் திலகம் இடுவது போல விழும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என ஸ்ரீராமர் கோயிலின் கட்டுமான பணி திட்ட மேலாளர் ஜெகதீஷ் அப்லே கூறியிருந்தார்.

இதனிடையே ஸ்ரீராமர் கோயிலின் கர்பகிரகத்தில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீராமர் மற்றும் ஜானகி தேவி சிலைகளை வடிப்பதற்காக 6 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த மிக பெரிய சாலிகிராம கற்கள் நேபாளத்தில் உள்ள காளி கண்டகி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. நாடெங்கிலும் உள்ள வைணவர்கள் வீட்டில் சாலகிராமத்தை வைத்து பூஜை செய்வது வழக்கத்தில் உள்ளது. இந்த சாளகிராமம் மஹா விஷ்ணுவின் வடிவமாகவே கருதப்படுகிறது. சீதையின் பிறந்த இடமான ஜனக்பூரைச் சேர்ந்த நேபாளி காங்கிரஸ் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான பிமலேந்திர நிதி, காளி கண்டகி நதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இரண்டு கற்களை அனுப்பும் முயற்சிகளை ஒருங்கிணைத்தார். 7 அடி நீளம் 5 அடி அகலம் 3 அடி தடிமன் உள்ள தலா சுமார் 15 டன் எடையுள்ள இந்த கற்களை நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு எடுத்துவர சுமார் 8 நாட்கள் பிடித்தது. வழியெங்கும் மக்கள் அந்த கற்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி அனுப்பி வைத்தனர். ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ஸ்ரீராமரின் மூர்த்திகளை செதுக்கப் பயன்படுத்தப்படவுள்ள இந்த சாலிகிராம கற்கள், நேபாளத்திலிருந்து பல நகரங்கள் வழியாக அயோத்திக்கு வந்தது என கூறினார். சாலிகிராம கற்கள் அயோத்திக்கு வந்ததைத் தொடர்ந்து, அவற்றை வழிபட விரும்பும் பக்தர்கள், ராம்சேவக் புரத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஸ்ரீராமர் சீதை சிலைகளை வடிப்பதற்கு முன்பாக இந்த கற்களுக்கு விஷேஷ பூஜைகள் செய்யப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here