மாம்பழம் தராததால், தன் தந்தை சிவ பெருமானிடம் கோபித்துக் கொண்டு, பழனியில் குடி பெயர்ந்தார் முருகப் பெருமான். அந்த இடத்திற்கே சென்ற, தாயார் பார்வதி தேவி அவர்கள், ஞான வேலை வழங்கியதாக புராணக் கதைகள் கூறுகின்றது. அந்த நாளைக் குறிக்கும் வகையில், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேசியா போன்ற உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில், “தைப் பூசத் திருநாள்” வெகு விமரிசையாக கொண்டாடப் படுகின்றது.
தைப்பூசம் அன்று, ராமலிங்க அடிகளார் என அன்புடன் அழைக்கப் படும், “வள்ளலார்” அவர்கள், ஜோதியில் இரண்டறக் கலந்து இறைவனடி சேர்ந்தார் என்பதால், அந்த நாளன்று வள்ளலார் பக்தர்களால் அவரின், நினைவு நாள் அனுசரிக்கப்படும்.
ராமலிங்க அடிகளார்:
ராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி, ராமையா பிள்ளை – சின்ன அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். சிறு வயதில் இருந்தே, இறைவன் மேல் பக்தி கொண்டு, பல பாடல்களை பாடி உள்ளார். அவ்வாறு அருளியது “திருவருட்பா”.
1867 ஆம் ஆண்டு “சத்திய தருமசாலை” வடலூரில் நிறுவினார். அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கும் அமைப்பை ஏற்படுத்தினார். தன்னுடைய காலத்தில் பெரும்பான்மையான நாட்களை, சென்னை பாரிமுனையில் உள்ள கந்தசாமி கோவிலில் கழித்தார்.
சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதி, “வள்ளலார் நகர்” என அழைக்கப் படுகின்றது. அவரை கவுரவிக்கும் வகையில், 17 ஆகஸ்ட் 2007 ஆம் தேதியன்று, அரசு தபால் தலை வெளியிட்டது. 30 ஜனவரி, 1874 அன்று தைப்பூசம் தினத்தன்று, இறைவனோடு ஜோதியாக ஐக்கியமானார்.
ராமலிங்க அடிகளார், “வள்ளலார்” என அன்புடன் அழைக்கப் படுவார். “சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை” நிறுவினார். “மனித சேவையே நாராயணன் சேவை” என கூறி, அதன் படியே வாழ்ந்தார். “இறைவன் முன் அனைவரும் சமம்” என உபசரித்தார். “அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி” என்னும் மந்திரத்தை அவரின் சீடர்கள் எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என மூன்று மொழி கொள்கைக்கு வள்ளலார் ஆதரவு தெரிவித்து இருந்தார். அவருடைய பாட சாலையில், மூன்று மொழிகளிலும் பாடங்கள் இருந்தது.
23 மே, 1867 ஆம் ஆண்டு அன்று, வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பானது, இன்றளவும் எரிந்து கொண்டே இருக்கின்றது. இரவு நேரத்தில் உணவு செய்யாத போதும், ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும். சாதி, மதம், மொழி கடந்து பலரின் பசியைப் போக்க, தினசரி மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
திருவருட்பா:
“திருவருட்பா” என்ற நூலில் அனைத்தும் அடங்கி உள்ளன. அது ஒரு ஞானக் களஞ்சியம்.
நாம் யார், நமது நிலை எப்படிப் பட்டது?
கடவுள் நிலை என்ன?
விரைவாக நாம் கடவுளை எப்படி அடைய முடியும்?
அழியாத உடல் தேகத்தை பெற்று, நித்திய வாழ்வு வாழ்வது எப்படி?
என ஆராய்ந்து, அறிந்து அதனை கண்டறியும் வழியினை, வள்ளலார் உணர்ந்தார். தான் கண்டு அடைந்த அந்த வழியை எல்லோருக்கும் கிடைக்கவே, “சமரச சுத்த சன்மார்க்க” நெறி முறைகளை ஏற்படுத்தினார்.
பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றாலும், எந்த வகையாலும் கண்டு உணர முடியாத இறைவனை, மிகவும் சுலபமாக அனைவரும் கண்டறியும் பொருட்டு, வள்ளலாரால் ஏற்படுத்தப் பட்டதே “சமரச சுத்த சன்மார்க்கம்” ஆகும். நாம் பெற வேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம். துன்பத்தில் இருந்து ஜீவ காருண்ய வழி நடத்தி, மனிதனுக்கு வேண்டிய உயர் நிலையை அடைய செய்வதே, சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
வள்ளலார் நிறுவிய சபையில் ஆர்.எஸ்.எஸ்.:
1972 ஆம் ஆண்டு, அன்றைய அகில பாரத அதிகாரி மதிப்பிற்கு உரிய திரு மாதவ ராவ் மூலே அவர்கள், சத்திய ஞான சபைக்கு விஜயம் செய்து இருக்கின்றார். அங்கு இருந்த நிலையை பார்த்து வியந்தார். அவர்களுடன் நல்ல நட்புறவு ஆர்.எஸ்.எஸ் வைத்து இருந்தது. அதன் மூலம், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆண்டு தோறும் நடத்தும் “சங்க சிக்ஷா வர்க” அங்கு நடை பெற்றது.
அகில உலக தலைவர் (சர் சங்கசாலக்) பதவியில் இருந்த மதிப்பிற்கு உரிய திரு ரஜுபையா அவர்களும், சத்திய தரும சாலைக்கு சென்று ஆசிரமத்தின் பணிகளை கேட்டு அறிந்து, பாராட்டு தெரிவித்தார்.
வள்ளலார் போதனைகள்:
இந்து மதத்தில் கூறப்படும் அனைத்து போதனைகளையும் வள்ளலார் கூறி இருக்கின்றார்.
பசித்தவருக்கு உணவு – அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, கோவில்களில் அன்னதானம் வழங்கப் படுகின்றது. அன்னதானம் வழங்கும் போது, கிடைக்க பெறுபவர்கள், எந்த சாதி, மதம் மொழி என தெரிந்து கொள்ளாமல், யார் வந்தாலும், இறைவனுக்கு முன் உணவை பெறுவதே நமது மதத்தின் பாரம்பரியம். எனவே தான், வள்ளலார் நிறுவிய தர்ம சாலையிலும், அவருடைய மடங்கள் அனைத்திலும், அனைவருக்கும் பசியாற உணவு விநியோகிக்கப் படுகின்றது.
சகோதரத்துவம் – அனைவரையும் உறவு முறை கூறி அழைப்பது நமது பெருமை. அண்டை வீட்டார் மற்றும் புதியவர்களை அத்தை / மாமா என்றும், அண்ணா / அக்கா / தம்பி / தங்கை என்ற உறவு முறை கூறி அழைப்பது, நமது பெருமைகளில் ஒன்று.
அனைவரையும் சமமாக பாவித்தல் – “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்”…
என்ற வாக்கிற்கு ஏற்ப, அனைவரும் ஒரே குடையின் கீழ், ஒன்று இணைந்து செயல் படுவது, நமது மதத்தின் பெருமைகளில் ஒன்று. கோவில் திருவிழாக்களில், “ஊர் கூடி தேர் இழுப்பது” அதற்கு சிறந்த சான்று.
தனி மனித ஒழுக்கம் – மற்றவர்களை தனது சகோதரியாக பார்ப்பதுமே, உடன் பிறந்தவர்களாக பார்ப்பதுமே, நமது மதத்தின் பெருமைகளை சிறப்பாக எடுத்து உரைக்கும்.
ஜீவகாருண்யம் – எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காமல், எல்லா உயிர்களையும் சமமாக பாவித்து நடத்தி வருவதே, நமது மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதுவே நமது மண்ணின் மகத்துவம்.
சில கட்சிகள் வள்ளலாருக்கும், இந்து மதத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பன போன்ற கருத்துக்களை கூறி வருகின்றனர். வள்ளலார் என்றாலே, அவருடைய நெற்றியில் இருக்கும் மூன்று விபூதி பட்டை தான் ஞாபகத்திற்கு வரும்.
1874 ஆம் ஆண்டு வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானார். அது நடந்தது ஜனவரி 30, தைப்பூசம் திருநாள் அன்று.
“தைப்பூசம்” என்பது ஹிந்து மதம் சேர்ந்தவர்கள் மட்டுமே கொண்டாடும் வைபவம். வள்ளலார் தன்னுடைய இளமை பருவத்தின், பெரும்பான்மையான காலத்தை கந்தசாமி கோவிலில் கழித்தார். முருகன் மேல் தீவிர பக்தி கொண்டவர். இவ்வாறு இருந்தும், ராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலாரை, நமது மதத்தில் இருந்து பிரிக்க நினைத்து, சிலர் பேசி வருகின்றனர். அவர்களை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.
ஹிந்து மதம் போதித்த அனைத்து கருத்துக்களையும் உள் வாங்கி, அதனை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில், மக்கள் சேவையாற்றிய வள்ளலாரின் நினைவை, என்றென்றும் போற்றுவோம். இந்து மதத்தில், குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசி, பிரச்சினையை மூட்ட நினைக்கும் சிலரை, அடையாளம் கண்டு தைப்பூசத் திருநாள் அன்று இறைவனுடன் ஜோதியில் இரண்டறக்கலந்த வள்ளலார் நினைவு நாளன்று, அவர்களின் வஞ்சக எண்ணத்தை ஊர் அறிய செய்வோம் என சபதம் ஏற்போம்…!!!