பாரதம் மற்றும் மத்திய ஆசியா: வரலாற்று, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான இமயமலை இந்தியப் பெருங்கடல் பகுதிகளை சேர்ந்த சமூகத்தின் (HHRS) 3வது சர்வதேச மாநாடு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய ஆசிய பிராந்தியத்தின் அறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள், அரசு பிரதிநிதிகள் என பலர் வந்திருந்தனர். மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சார ஆய்வுகள் பள்ளி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றம் (FANS) ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ICSSR), இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA), பவர் கிரிட், என்.டி.பி.சி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) மற்றும் நிஷ்பக்ஷ் பிரதிடின் ஆகியவை இந்த மாநாட்டின் இணை பங்காளிகளாக இணைந்தனர். இந்த கூட்டம் அமைதி, வன்முறை இல்லாத உலக ஒழுங்கை வலியுறுத்தியது. மத்திய ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்து, அனைவரும் விசுவாசிகள் தான், யாரும் காஃபிர்கள் அல்ல என்று பிரகடனம் செய்தது. மேலும் நாடுகளுக்கு இடையே சிறந்த தொடர்பு மற்றும் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியது.
மாநாட்டில், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், அஜர்பைஜான், ஆர்மேனியா, மங்கோலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் உட்பட சுமார் 500 உயர்மட்ட பிரதிநிதிகள், பாரதத்தின் பாதுகாப்புப் படை அதிகாரிகள், இந்தியக் குடிமைச் சேவைகள், இந்தியக் குடிமைப் பணி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் நோக்கம் பாரதத்திற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார உறவைப் பற்றி விவாதிப்பதாகும். இந்த மாநாடு இவ்விரு பிராந்தியங்களுக்கிடையில் உள்ள ஆழமான கலாச்சார தொடர்புகள், மக்களுக்கிடையேயான தொடர்பு, வரலாற்று தொடர்புகள், வர்த்தகம் போன்ற பல தலைப்புகளில் புதிய கோணங்களை வெளிப்படுத்தியது.
அமர்வின் தொடக்கத்தில் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மஸ்ஹர் ஆசிப் வரவேற்றுப் பேசினார். மாநாட்டின் தொடக்க அமர்வில் முக்கிய உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றத்தின் புரவலருமான இந்திரேஷ் குமார், பாரதிய சமுதாயத்தின் பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தற்போதைய சூழலில் ‘வசுதைவ குடும்பகம்’ தத்துவத்தின் தேவையப் பற்றி பேசிய அவர், “பாரதம் எந்த தேசத்தையும் ஆக்கிரமிக்கவோ அல்லது மக்களை அடிபணியச் செய்யவோ விரும்பியதில்லை. மறுபுறம், பாரதிய மக்கள், அவர்கள் எங்கு சென்றாலும், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை மேம்படுத்தி மதிப்பு சேர்த்தனர். அமைதி மற்றும் அகிம்சைக்காக மக்கள் பாடுபட வேண்டும். அமைதி மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை பரப்பும் இந்த பணியில் பாரதம் உலகின் சிறந்த தலைவராக இருக்க முடியும்” என்றார்.
வெவ்வேறு பெயர்களின் அழகை வெளிப்படுத்திய இந்திரேஷ் குமார், ஆர்யவர்தா, ஹிந்துஸ்தான், ஹிந்த் மற்றும் பாரத் போன்ற இந்த பெயர்கள் தேசத்தின் தரம் மற்றும் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. அதன் புவியியல் அமைப்பு அல்லது விரிவாக்கம் மட்டுமல்ல. அமைதி, சகோதரத்துவம் மற்றும் மேம்பாடு ஆகிய கொள்கைகளில் உலகை வழிநடத்தும் சிறப்பான பண்புகளை பாரதம் வெளிப்படுத்தியிருப்பதால், ‘விஸ்வகுரு’ என்ற பட்டம் பாரதத்துக்கே உரியது” என்று கூறி “ஜெய் பாரத், ஜெய் ஆசியா, ஜெய் ஜகத்” என்ற நம்பிக்கைக்குரிய முழக்கத்துடன் தனது உரையை முடித்தார்.
மத்திய ஆசியப் பிராந்தியத்தில் பழங்காலத்திலிருந்தே பாரதம் கணிசமான பங்கைக் கொண்டிருந்ததை பேராசிரியர் எம்.மஹ்தாப் ஆலம் ரிஸ்வி தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாரதத்தின் நிலையான வெளியுறவுக் கொள்கைகளையும் அவர் விளக்கினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, பாரதம் மற்றும் மத்திய ஆசியா உறவை வளப்படுத்த பாதுகாப்புக்காக மத்திய ஆசிய நாடுகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பு, பயனுள்ள ஒத்துழைப்பு உத்திகளை உருவாக்குதல் மற்றும் சாலை வரைபடத்தை பட்டியலிடுதல். எதிர்கால ஒத்துழைப்பு என மூன்று முக்கியமான விஷயங்களைப் பற்றி ஆலோசித்துள்ளார்” என கூறினார்.
தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றத்தின் தேசியத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஆர்.என். சிங் தனது உரையில், மத்திய ஆசிய நாடுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் பாரதத்தின் பங்கை எடுத்துரைத்தார். அந்த அமைப்பின் டெல்லி பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) சௌரேஷ் பட்டாச்சார்யா, பாரதம் மற்றும் மத்திய ஆசியா தொடர்பான முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கான கல்வித் தளத்தை உருவாக்குவதில் இந்த மாநாட்டின் பங்களிப்பை விளக்கினார். தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றத்தின் தேசிய பொதுச்செயலாளர் கோலோக் பிஹாரி ராய் தனது உரையில், “பாரத பரம்பரையின் கலாச்சார தூதர்களாக வணிகர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் இருந்த காரனத்தால் தான் ஆயுதங்கள் மற்றும் ராணுவங்களை பயன்படுத்தாமல் மத்திய ஆசிய பிராந்தியத்தில் பாரதிய கலாச்சாரம் பரவியது” என்றார். மகேஷ் சந்திர ஷர்மா (இயக்குனர், RDFIH) தேசிய மற்றும் அரசு என்ற கருத்தின் நுணுக்கங்கள் குறித்து உரையாற்றினார். ‘புவி கலாச்சார தேசியவாதம்’ குறித்த கல்வி அவசியம் என வலியுறுத்தினார்.