தயானந்த சரஸ்வதி பிப்ரவரி 12,1824,ஆம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் மூல சங்கர். சமஸ்கிருதம், வேதம், புராணம் ஆகியவற்றை கற்றார்.
ஹரித்வார், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களில் மகான்கள், யோகிகளிடம் சாத்திரங்கள், யோகம் கற்றார். மதுராபுரியில் வாழ்ந்த சுவாமி விரஜானந்தரிடம் சீடராகச் சேர்ந்தார். தயானந்த சரஸ்வதியாக மாறினார்.
குருவின் கட்டளையை ஏற்று மக்களிடம் ஞானமும், கல்வியும் பரவச் செய்வதற்காக ஆன்மிக, சமூக சேவைகளில் இறங்கினார். ஏகேஸ்வரவாத் (இறைவன் ஒருவனே) என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். மதங்களின் பெயரால் நடைபெறும் ஏமாற்று வேலைகள், மோசடிகளை மக்களிடம் எடுத்துரைத்தார்.
கல்வியையும், ஞானத்தையும் மக்களுக்கு போதிக்க 1875-ல் ‘ஆரிய சமாஜம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ஜாதி, மத வேறுபாடுகளைக் களைதல், மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு, உள்ளிட்ட முற்போக்கு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். குழந்தைத் திருமணம், மூட நம்பிக்கைகளை எதிர்த்தார், சதி வழக்கத்தைக் கண்டித்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.
பிற சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்து சமயத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். அனாதை இல்லங்கள், விதவைகள் மறுவாழ்வு இல்லங்கள், வேதக்கல்வியைப் பரப்புவதற்கான குருகுலங்களைத் தொடங்கினார்.
ஆரிய சமாஜத்தின் கிளைகள் முதலில் பம்பாயிலும் பின்னர் பஞ்சாபிலும் தொடங்கப்பட்டன. வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் பரவின. ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தினார். ‘ஸ்வராஜ்’ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் இவர்தான்.
சமஸ்கிருத நூல்களை இந்தியில் மொழிபெயர்த்தார். இவரது ‘பிரதிமா பூஜன் விச்சார்’, ‘பாகண்ட கண்டன்’, ‘ருக்வேத பாஷ்யம்’, ‘பஞ்சமஹாயக்ஞ விதி’, ‘ஆர்யாபிவினய்’, ‘வேதாந்த பிரகாஷ்’ உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘ருக்வேதாதி பாஷ்யபூமிகா’ என்ற நூல் இவரது அசாதாரண மொழிப் புலமையை வெளிப்படுத்தியது.
1874-ல் ‘சத்யார்த்த பிரகாஷ்’ என்ற நூலை எழுதினார். இது உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. தனது எண்ணங்கள், கருத்துகள், சிந்தனைகளை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தியதால் இவருக்கு நிறைய விரோதிகளும் உருவாயினர். இதுவே இவரது மரணத்துக்கும் காரணமானது. பேராசையால் தனக்கு விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் மனம்வருந்தி மன்னிப்புக்கேட்ட சமையல்காரனை மன்னித்து அவனுக்குப் பணமும் கொடுத்து தப்பித்துப் போகும்படி கூறி அவனைக் காப்பாற்றினார்.
மக்கள் இவரை ‘மகரிஷி’ எனப் போற்றினார்கள். ஆன்மிகவாதியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.