தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் காவிரி, அடையாறு, கூவம், வைகை, வெண்ணாறு, தாமிரபரணி ஆகிய ஆறு நதிகளில் மாசுத்தடுப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ. 908.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 13 நகரங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய நீர்நிலை சூழல் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் (என்.பி.சி.ஏ) பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட மூன்று இடங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ. 363.10 லட்சத்தை தமிழக அரசுக்கு விடுவித்துள்ளது. தமிழகத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2021-22-ம் நிதியாண்டில் சேர்க்கப்பட்டு, ரூ. 44.22 கோடி மத்திய அரசின் நிதியுதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 9.04 கோடி விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ள நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தின் நீர்வளத் திட்டங்களுக்காக ரூ.186.53 கோடி மத்திய உதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், சீரமைத்தல் ஆகிய பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், சென்னை நகரைப் பொறுத்தவரை, நிதியுதவிக்கான கருத்துரு எதையும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் பெறவில்லை என மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார்.