1. வங்காளத்தின் நாதியா கிராமத்தில் பிப்ரவரி 18, 1486 ஆம் ஆண்டு பிறந்தார். விஷம்பர் என்பது இவரது இயற்பெயர். நிமாயி செல்லப் பெயர்.
2. இந்தக் குழந்தை அழும்போது யாராவது கைகளைத் தட்டிக்கொண்டே புனித நாமங்களை பாடினால் உடனே அழுகையை நிறுத்திவிடும்.
3. பால பருவத்திலேயே ராமர், கிருஷ்ணர் மீது பக்தி பாடல்களை மனமுருகிப் பாடுவார்.
4. 1509-ல் பீகாரில் கயா என்ற இடத்தில் ஈஷ்வர்புரி என்ற துறவியை சந்தித்தார். அவர் போதித்த ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் இவரது வாழ்க்கையை மாற்றியது. துறவறம் மேற்கொண்டார். ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு என அழைக்கப்பட்டார்.
5. கிருஷ்ண பகவானை நினைத்து தன்னை ராதாவாக எண்ணிக்கொண்டு அவர் மீது பக்திப் பாடல்களைப் பாடினார்.
6. பலர் இவரது சீடர்களாக மாறினர். சீடர்களுடன் சேர்ந்து தெருவெங்கும் டோலக், மிருதங்கம், தாளம், ஜால்ரா ஆகிய வாத்தியக் கருவிகளை இசைத்துக் கொண்டு உரத்த குரலில் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்திப் பாடல்களை பாடிக் கொண்டே நடனம் ஆடிச் செல்வார்.
7. ஸ்ரீமத் பாகவதத்தையும் பகவத் கீதையையும் பிரச்சாரம் செய்தார். தற்போது உலகம் முழுவதும் மகாமந்திரமாகப் போற்றப்பட்டு வரும் ‘ஹரே-கிருஷ்ண, ஹரே-கிருஷ்ண, கிருஷ்ண- கிருஷ்ண, ஹரே- ஹரே, ஹரே-ராம ஹரே-ராம ராம-ராம ஹரே ஹரே’ என்ற 16 வார்த்தைகள் கொண்ட கீர்த்தனை இவர் வழங்கியதுதான்.
8. ஏராளமான குணப்படுத்த முடியாத நோய்களால் பீடிக்கப்பட்டவர்களை இவர் குணப்படுத்திள்ளார். இவருடைய போதனைகள் ‘ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருத்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
9. தனது வாழ்நாள் முழுவதும் அன்பையும், பக்தியையும் போதித்தவர் சைதன்ய மகாபிரபு.