நாட்டின் பழங்குடியின மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுப்பதிலும், நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை அளிப்பதிலும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. அந்த வகையில், தேசிய அளவில் பழங்குடியினரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் முயற்சியாக, ‘ஆதி மஹோத்சவ்’ என்ற மாபெரும் பழங்குடியினர் திருவிழா நடைபெற்றது. டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் இந்த விழாவை பிப்ரவரி 16ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிப்ரவரி 27 வரை நடைபெறும் இவ்விழாவில், நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1000 பழங்குடி கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். பழங்குடியினரின் கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், பாரம்பரிய கலை ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் ‘ஆதி மஹோத்சவ்’ திருவிழா அமைந்துள்ளது. இந்த சூழலில், ‘ஆதி மஹோத்சவ்’ மீதான பரவலான மக்களின் ஆர்வம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர் டாக்டர். போலா சிங் ‘ஆதி மஹோத்சவ்’ நிகழ்ச்சியை தான் பார்வையிட்டது குறித்து தொடர் டுவீட் பதிவு செய்திருந்தார். அதில், பாரதம் முழுவதிலுமிருந்து பழங்குடி கலாச்சாரத்தின் அற்புதமான விளக்கக்காட்சியை நீங்கள் காணக்கூடிய வகையில் இது மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த டுவீட்டிற்கு பதில் அளித்த பிரதமர், “‘ஆதி மஹோத்சவ்’ மீதான உங்களது ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பழங்குடி சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் உணவு பற்றிய உங்கள் அனுபவம் ஊக்கமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.